கேப்டன் ஸ்மிட் மச்சாருக்கு அசோக் சக்ரா வழங்க வேண்டும்; மத்திய அரசுக்கு ABVP கோரிக்கை
172-க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காப்பாற்ற துணிச்சலுடன் செயல்பட்ட இந்திய விமானி கேப்டன் ஸ்மிட் மச்சாருக்கு அசோக் சக்ரா விருது வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் கோரிக்கை விடுத்துள்ளது
அருணாசலப் பிரதேச தலைநகர் இடாநகரில் அக்டோபர் 2 மற்றும் 3-ஆம் தேதிகளில் நடைபெற்ற ABVP-யின் இரண்டு நாள் அகில இந்திய பொறுப்பாளர்கள் கூட்டத்தில் இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கேப்டன் ஸ்மிட் மச்சார் வெளிப்படுத்திய அசாதாரண துணிச்சலையும், பயணிகளின் பாதுகாப்பிற்காக மேற்கொண்ட செயலையும் தேசிய அளவில் கவுரவிக்க வேண்டும் என அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ஃப்ளை துபாய் விமானத்தில் ஏற்பட்ட தாக்குதல் சம்பவத்தின் போது காயமடைந்த நிலையிலும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர உதவிய ஸ்மிட் மச்சாரின் நடவடிக்கையால் விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அவரது வீரத்தை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட தலைவர்களும் பாராட்டியுள்ளனர்.
இதையடுத்து, அமைதிக்காலத்தில் வழங்கப்படும் இந்தியாவின் உயரிய வீரதீர விருதான அசோக் சக்ராவை கேப்டன் ஸ்மிட் மச்சாருக்கு வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று ABVP மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.
















