அமெரிக்காவுடனான போர் தொடங்கி ஏழு மாதங்கள் ஆன நிலையில், ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையிலான ஈரானின் பணவீக்கம் கிட்டத்தட்ட 90 சதவீதத்தை எட்டியுள்ளது. இந்தச் சரிவு ஈரானுக்கு விழுந்த பலத்த அடியாக பார்க்கப்படுகிறது.
அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
கடந்த அக்டோபர் 1ம் தேதி ஒரு டாலரின் மதிப்பு 1.49 சதவீதம் உயர்ந்து 2,593,000 ரியால்களாக உயர்ந்தது. இது கடந்த ஓராண்டில் இல்லாத உச்சமாகும்.
ரியால் நாணயத்தின் இந்தச் சரிவை, அமெரிக்காவின் ‘ஆபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்’ நடவடிக்கைகளின் வெற்றிக்குச் சான்றாக சுட்டிக்காட்டியுள்ள அமெரிக்கக் கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் (Scott Bessent) கடந்த வியாழக்கிழமை ஈரானின் வாகன மற்றும் ரயில் துறைகள் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதாக அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்.
கூடுதலாக ரஷ்யாவுடன் தொடர்புடைய A7 நெட்வொர்க் உட்பட இந்தோனேசியா, ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி மற்றும் ஹாங்காங்கைச் சேர்ந்த நிறுவனங்கள் என ஈரானின் வாகனத் தொழிலுக்கு ஆதரவளித்த வெளிநாட்டு நிறுவனங்கள் மீதும் அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.
அமெரிக்காவின் தடைகளால் ஏற்பட்ட பாதிப்பு ஈரானின் நுகர்வோர் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டில் மலிவான மொபைல் போன்களின் விலைகள் ஒரே மாதத்தில் 42 சதவீதம் வரை உயர்ந்துள்ளன. இது நாணயத்தின் மதிப்பிழப்பு விகிதத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது.
இறைச்சி மற்றும் கோழி இறைச்சி விலை 178 சதவீதமும் பால் மற்றும் பால் பொருட்கள், முட்டை ஆகியவை 152 சதவீதமும், ரொட்டி ,உணவுப் பொருட்கள் 139 சதவீதமும் அதிகரித்துள்ளன.
ஈரானில் சராசரி மாதச் சம்பளம் சுமார் 125 டாலர் என்ற நிலையில் ஒரு குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளுக்கான செலவு சுமார் 450 டாலருக்கும் மேலாக அதிகரித்துள்ளது.
அடிப்படை வாழ்வாதாரச் செலவில் மூன்றில் ஒருபங்கைக் கூட பூர்த்தி செய்ய முடியாத வருமானத்தில் ஈரான் மக்கள் தவித்து வருகின்றனர். மேலும் வேலைவாய்ப்பின்மை 10 சதவீதத்தை விட கூடியுள்ளது.
சொல்லப்போனால் கடுமையான பணவீக்கத்திலிருந்து மீள முடியாத “ஹைப்பர்இன்ஃபிளேஷன்” (Hyperinflation) நிலையை நோக்கி ஈரான் வேகமாக செல்வதாக பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலைமைக்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் திணிக்கப்பட்ட போர் காரணம் என்று ஈரான் அரசு தெரிவித்தாலும் ஏழு நாள் போர்நிறுத்த முன்மொழிவை ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி மூலம் அமெரிக்காவிடம் பரிந்துரைத்துள்ளது.
இதற்கிடையே ஆகஸ்ட்டில் 3.4 மில்லியன் பேரல்களிலிருந்து செப்டம்பர் மாதத்தில் ஒரு நாளைக்கு சுமார் 6.1 மில்லியன் பேரல்களாக சவூதி அரேபியாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. அதே நேரம் போர் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக, செப்டம்பர் மாதத்தில் ஈரான் எந்தக் கச்சா எண்ணெயையும் ஏற்றுமதி செய்யவில்லை என்று தரவுகள் காட்டுகின்றன.
ஹார்முஸ் ஜலசந்தி மீதான தனது பிடியையும் வளைகுடா வழியாக மற்ற அரபு நாடுகளின் எண்ணெய் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தும் அதன் திறனையும் ஈரான் இழந்து வருகிறது என்பதே உண்மை. மேலும் மிதக்கும் சேமிப்பிடங்களிலிருந்து சீன சுத்திகரிப்பு நிலையங்களுக்கு எண்ணெய் விநியோகம் செய்து வருவதால் விரைவில் ஈரானின் எண்ணெய் இருப்புக்கள் தீர்ந்துவிடும் என்று கூறப்படுகிறது.
வரும் நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத் தேர்தலுக்குப் பிறகு ஈரானின் மீது கடுமையான தாக்குதல்களை நடத்துவதற்கான சாத்தியம் இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் USS Theodore Roosevelt போர்க்கப்பலையும் கூடுதல் படைகளையும் மத்திய கிழக்கு நோக்கி பென்டகன் அனுப்பி வைத்துள்ளது. இது மத்திய கிழக்குப் பகுதியில் அமெரிக்காவின் மூன்று ‘விமானந்தாங்கி போர்க்கப்பல் குழுக்களை’ ஒருங்கிணைத்து தாக்குதல்களை நடத்த உதவும் என்று கூறப்படுகிறது.
ஈரானின் அணுகுமுறையையே அமெரிக்காவும் பின்பற்றுகிறது; அதாவது ஒப்பந்தம் செய்துகொள்ளவோ அல்லது நேரடிப் போரில் ஈடுபடவோ அது தயாராக உள்ளது. அமெரிக்கா அல்லது இஸ்ரேலின் எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் “உடனடி, வலிமிகுந்த, வருத்தத்தை ஏற்படுத்தும் பதிலடி” கொடுக்கத் தயாராக இருப்பதாக இஸ்லாமியப் புரட்சிகர காவல் படை கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
இரு தரப்பினரும் பொதுவாக ஒரு உடன்பாட்டை விரும்பினாலும் நெருங்கி வருவதற்குப் பதிலாக விலகிச் செல்கிறார்கள் என்றுதான் புவிசார் அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
















