திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 9 மாதங்களில் ஆயிரத்து 129 கோடியே 4 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்து சாதனை படைத்துள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு உண்டியல் காணிக்கை வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக கடந்த ஜூலை மாதத்தில் 140 கோடியே 25 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக வசூலிக்கப்பட்டதாகவும்,
குறைந்தபட்சமாக பிப்ரவரி மாதத்தில் 110 கோடியே 92 லட்சம் ரூபாய் காணிக்கை வசூலானதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை ஆயிரத்து 23 கோடியே 22 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்ததாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
மேலும், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மாதந்தோறும் சராசரியாக 110 கோடி ரூபாய்க்கு குறையாமல் உண்டியல் காணிக்கை பெறப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் தொடர்ந்து புதிய சாதனைகள் படைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















