வெற்றிப் பயண திட்டத்தால் தங்களுடைய வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.
மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் விரிவுபடுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்களின் வருகையின்றித் தனியார் பேருந்துகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஒரு தனியார் பேருந்தை இயக்க ஓட்டுநர், நடத்துநர், பராமரிப்புப் பணியாளர்கள் என நேரடியாக 6 பேர் பணியாற்றி வருவதாகவும், போதிய வசூல் இல்லாததால் உரிமையாளர்களால் ஊதியம் வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் ஊழியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும், இலவசப் பயணம் நல்ல திட்டம் என்றாலும், வசதி படைத்தவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இதை பயன்படுத்துவதை தவிர்த்து, வருமானத்தின் அடிப்படையில் இத்திட்டத்தை வரைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், அரசுப் பேருந்துகளை போலவே தனியார் பேருந்துகளுக்கும் மானியம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















