‘உலக மக்கள் அனைவரும் நிறைவாக வாழ வேண்டும். இதற்காக நம் தேச மக்கள் சமூக பணியாற்ற அதிகளவில் முன்வர வேண்டும்,” என ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் அழைப்பு விடுத்துள்ளார்.
மஹாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள தியோலாபூரில், மறைந்த விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்காலின் நுாற்றாண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் பங்கேற்றார்.
அப்போது பேசியவர், உலக நன்மை, சமூக நலன் மற்றும் நம் பாதுகாப்பான வாழ்வுக்கு, நம் பாரம்பரியத்தை பின்பற்றவது தான் சரியான வழி எனக் கூறினார். இந்த வழியை யாராலும் தவிர்க்க முடியாது, ஒவ்வொருவரும் வாழ்க்கையை நிறைவாக வாழ வேண்டும் எனத் தெரிவித்தார்.
தேசத்தின் மக்கள் தொகையுடன் ஒப்பிட்டால், சமூக சேவைக்கு வருவோரின் எண்ணிக்கை மிக குறைவாகவே இருக்கிறது என்றும் சமூகத்திற்காக பணியாற்ற, நிறைய பேர் முன்வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார். தனிப்பட்ட வாழ்க்கையில் தியாகம், சகிப்புத்தன்மையை வெளிப்படுத்தி வாழ்பவர்களே மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ முடியும் எனவும் கூறினார்.
















