லடாக்கில் சுற்றுலா மற்றும் விவசாயத்தை ஊக்கவிக்க பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மத்திய அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
லடாக்கில் 3 ஆயிரத்து 350 கோடி ரூபாய் மதிப்பிலான 5 வளர்ச்சித் திட்டங்களை காணொலி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். குஷோக் பகுலா ரிம்போச்சி விமான நிலையத்தில் 640 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை திறந்து வைத்த அவர், 298 கிலோ மீட்டர் நீளமுடைய சாலையையும் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
விவசாயத்துறையை ஊக்குவிக்கும் வகையில் ஹிம் நீர்நிலைத் திட்டத்தின் கீழ், 40 கிராமங்களில் உருவாக்கப்பட்ட 40 நீர்நிலைகளையும் பிரதமர் திறந்து வைத்தார்.
இதையடுத்து காணொலி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி, லடாக்கில் குளிர்கால சுற்றுலா மற்றும் சாகச சுற்றுலாக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது எனவும். இதன் மூலம், 150-ஆக இருந்த தங்கும் விடுதிகளின் எண்ணிக்கை தற்போது 3 ஆயிரமாக உயர்ந்துள்ளது எனவும் கூறினார்.
லடாக்கில் பசுமைக்குடில் விவசாயம் தொடர்ச்சியாக விரிவுபடுத்தப்பட்டு வருவதாகவும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த புதிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
கடினமான சூழல்களைக் கடந்து, லடாக்கின் உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
















