மதுரை மாநகரில் திடீரெனப் பெய்த கனமழையால் சாலையில் வெள்ளம் போல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
பெரியார் பேருந்து நிலையம், சிம்மக்கல், கோரிப்பாளையம், அண்ணா நகர், மாட்டுத்தாவணி உள்ளிட்ட பல இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.
ரயில்வே நிலையம் செல்லும் சாலை மற்றும் நத்தம் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பைக்குகள் உள்ளிட்ட வாகனங்கள் நீரில் மூழ்கின. மீனாட்சி அம்மன் கோவில் மாசி வீதிகளிலும் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தத்தனேரி, பழங்காநத்தம் உள்ளிட்ட தரைப்பாலங்களில் வெள்ளம் சென்றதால் போக்குவரத்துத் தடைப்பட்டது. மழை காரணமாகச் சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் மதுரை முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
















