தமிழகத்தில் இந்து கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் சொத்துக்களை பாதுகாப்பதில் அரசு தோல்வியடைந்துள்ளதாக இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம்சாட்டியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி பேருந்து நிலையம் முன்பு இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கோயில் நிலங்களை பாதுகாக்க வேண்டும், நில மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும், முறைகேட்டில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர். மேலும், பெண்கள் கும்மியடித்தும், பாடல்களை பாடியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், தமிழகத்தில் இந்து கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் சொத்துக்களை பாதுகாப்பதில் அரசு தோல்வியடைந்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
பக்தர்களிடமிருந்து பல்வேறு வழிகளில் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாகவும், கோயில் சொத்துக்களை பாதுகாப்பதில் அறநிலையத்துறை போதிய அக்கறை காட்டவில்லை எனவும் கூறினார்.
மேலும், மாநிலம் முழுவதும் கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள், கட்டடங்கள் மற்றும் பிற சொத்துக்கள் தொடர்பான முழுமையான விவரங்களை தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் எனவும் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தினார்.
















