பிரிக்ஸ் உச்சி மாநாட்டைத் தலைமையேற்று நடத்த இருக்கும் இந்தியா ஒரு புதிய பொதுவான பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்குவதை ஆதரிக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
18வது பிரிக்ஸ் உச்சி மாநாடு வரும் செப்டம்பர் மாதம் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ளது.
பிரிக்ஸ் அமைப்பு தொடங்கி 20 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் நான்காவது முறையாக பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்குத் தலைமையேற்றுள்ள இந்தியா, இம்மாநாட்டின் கருப்பொருளாக “Resilience, Innovation, Cooperation and Sustainability” அதாவது மகிழ்ச்சி, புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மை என்று அமைத்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச நிதி நிறுவனங்களை சீரமைக்கும் நோக்குடன் ஒரு சக்தி வாய்ந்த அமைப்பாக பிரிக்ஸ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
நியூ டெவலப்மென்டல் பேங்க் (New Development Bank) என்ற பெயரில் 250 கோடி அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் பிரிக்ஸ் கூட்டமைப்பு சார்பில் ஒரு வங்கி கடந்த 2014ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, பிரிக்ஸ் நாடுகளின் அவசரத் தேவைக்கு உதவும் வகையில் செயல்பட்டு வருகிறது.
பிரிக்ஸ் சர்வதேச அமைப்பில், உலகின் இரண்டு பெரிய வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளான சீனா, இந்தியா மற்றும் வல்லரசான ரஷ்யாவும் உள்ளன.
கடந்த 2023-ல் கூடுதலாக அர்ஜென்டினா, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, எத்தியோப்பியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளை இந்த கூட்டமைப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்டன. இதன் மூலம் உலகின் 30 சதவீதப் பொருளாதாரம் பிரிக்ஸ் நாடுகளிடமே உள்ளன.
முன்னதாக கடந்த 2022-ல் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் ரஷ்யா முன்வைத்த பிரிக்ஸ் நாணயத்தை அறிமுகப்படுத்தும் யோசனையை பிரேசில் அதிபர் லுலா டா சில்வா ஆதரித்தார்.
பிரிக்ஸ் நாணயத்தை அறிமுகப்படுத்துவது குறித்து கசான் மாநாட்டில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றாலும் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு இடையே எல்லை தாண்டிய பண பரிவர்த்தனை செய்வதற்கான புதிய வழிமுறையை உருவாக்குவது குறித்து விவாதிக்கப் பட்டது.
இது மேற்கத்திய கட்டண முறையான ‘ஸ்விஃப்ட் நெட்வொர்க்’ க்குப் பதிலாக சீனாவின் எல்லை தாண்டிய வங்கிகளுக்கு இடையேயான பணம் செலுத்தும் முறை (CIPS) மற்றும் ரஷ்யாவின் நிதிச் செய்திகளைப் பரிமாற்றும் முறை (SPFS) போன்ற பணம் செலுத்தும் உள்கட்டமைப்புகளையும் பயன்படுத்தும் எனக் கூறப்பட்டது.
கசான் உச்சிமாநாட்டின் போது, ரஷ்ய அதிபர் புதின், இருதரப்பு வர்த்தகத்தில் உள்ளூர் நாணயங்களைப் பயன்படுத்துவது அரசியலில்லா பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்று தெரிவித்திருந்தார்.
அதே 2022-ல் சர்வதேச வர்த்தகத்துக்கு வசதியாகவும், ரூபாய் மதிப்புக்கு பாதுகாப்பு அளிக்கவும் மத்திய ரிசர்வ் வங்கி, இ ரூபி என்ற டிஜிட்டல் நாணயத்தை வெளியிட்டது. இதுவரை, 70 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இதனை வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை அடுத்து டிஜிட்டல் யுவானை சர்வதேச அளவில் விரிவாக்கம் செய்ய இருப்பதாக சீனா அறிவித்தது.
2024-ஆம் ஆண்டில் மற்ற பிரிக்ஸ் நாடுகளுடனான ரஷ்யாவின் பரிவர்த்தனைகளில் 90 சதவீதம் ரூபிள்களிலும்,”நட்பு நாடுகளின்” நாணயங்களிலும் செய்யப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் அறிவித்திருந்தார்.
சீனாவும், ரஷ்யாவும் இருதரப்பு வர்த்தகத்தில் தங்கள் சொந்த நாணயங்களின் பயன்பாட்டை கணிசமாக அதிகரித்துள்ளன. கடந்த நவம்பர் நிலவரப்படி, இருநாடுகளின் இருதரப்பு வர்த்தகத்தில் 99 சதவீதம் யுவான் மற்றும் ரூபிளில் நடத்தப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு ஜூலையில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ ரியோ பிரகடனம், பிரிக்ஸ் நிதி அமைச்சர்களையும் மத்திய வங்கி ஆளுநர்களையும், பிரிக்ஸ் எல்லை கடந்த பணப்பரிவர்த்தனை முன்முயற்சி குறித்த கலந்துரையாடல்களைத் தொடருமாறு கேட்டுக்கொண்டது.
இந்நிலையில், 2026ம் ஆண்டிற்கான பிரிக்ஸ் உச்சிமாநாட்டுக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியா, ஒரு புதிய பொதுவான பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்குவதை ஆதரிக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.
ஒரு புதிய நாணயத்திற்குப் பதிலாக, இந்தியாவின் e-Rupee, சீனாவின் digital yuan போன்ற பிரிக்ஸ் நாடுகளின் மத்திய வங்கிகள் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயங்களை ஒன்றிணைத்து, அதன் மூலம் சர்வதேச வர்த்தகம் மற்றும் சுற்றுலாப் பரிவர்த்தனைகளை எளிதாக்க இந்திய ரிசர்வ் வங்கி முன்மொழிந்துள்ளது.
சீனாவின் எல்லை தாண்டிய வங்கிகளுக்கு இடையேயான பணம் செலுத்தும் முறை (CIPS) மற்றும் ரஷ்யாவின் நிதிச் செய்திகளைப் பரிமாற்றும் முறை (SPFS) போன்ற பணம் செலுத்தும் உள்கட்டமைப்புகளையும் அது சுட்டிக்காட்டியது.
உறுப்பு நாடுகள் டாலரைச் சார்ந்திருக்காமல், தங்களின் சொந்த நாட்டு நாணயங்களிலேயே நேரடியாகவும் உடனடியாகவும் பணப் பரிமாற்றம் செய்து கொள்ள ஏதுவாக, SWIFT-க்கு மாற்றாக “BRICS Pay” என்ற டிஜிட்டல் கட்டண முறையை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகின்றன
டாலரின் ஆதிக்கத்தைக் குறைப்பற்கு முன் முயற்சியாக ஒரு பொதுவான பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்குவதை விட, பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் தங்களின் உள்ளூர் நாணய வர்த்தகம் மற்றும் டிஜிட்டல் கட்டண நெட்வொர்க்குகளை இணைப்பதற்கு முன்னுரிமை அளித்துள்ளன.
டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற உள்ள சூழலில் ஒரு புதிய நாணயத்தை உருவாக்குவதை விட, உறுப்பு நாடுகள் தங்கள் சொந்த நாணயங்களைப் பயன்படுத்தி மிகவும் எளிதாக வர்த்தகம் செய்யவும், முதலீடு செய்யவும், பணம் செலுத்தவும் கூடிய ஒரு சூழலை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
















