இனி பாஸ்ப்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கும்போது ஆவணங்களை பதிவேற்றம் செய்ய ‘டிஜிலாக்கர்’ இணையப்பெட்டகம் முறையைப் பயன்படுத்தலாம் என மக்களுக்கு சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் அறிவுறுத்தி உள்ளது.
எப்போதும் பாஸ்போர்ட் பெறவேண்டும் என்றால் www.passportindia.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்போது, பாஸ்போர்ட் சேவை மையங்கள் (பிஎஸ்கே), அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்களில் (பிஓபிஎஸ்கே) ஆவணங்கள் பரிசீலனை செய்யப்படும். இந்நிலையில் இதுபோன்ற ஆவண சரிபார்ப்பு நேரங்களைக் குறைக்கத் தேவையான துணை ஆவணங்களை பதிவேற்ற ‘டிஜிலாக்கர்’ என்ற இணையப்பெட்டகம் (Digilocker) செயல்முறையைப் பயன்படுத்துமாறு சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.
இதன்மூலம், விண்ணப்பதாரர்கள் சேவை மையங்களுக்கு அசல் ஆவணங்களை எடுத்துச்செல்ல வேண்டிய அவசியமில்லை. பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் இணையப் பக்கத்தில் இணையதளம் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்போது, டிஜிலாக்கர் மூலம் ஆதார் ஆவணம் ஏற்கப்படும் வசதி செய்யப்பட்டுள்ளது.
டிஜிலாக்கர் மூலம் ஆதார் பதிவேற்றம் செய்வது பற்றிய கூடுதல் தகவல் அறிய https: / /voutu.be /MgxPGDVHib8 என்ற லிங்கில் உள்ள காணொலியைக் கண்டு அறியலாம் என சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.கோவேந்தன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வசதி ஆக.5 முதல் செயல்பாட்டுக்கு வரவுள்ளதாக பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் தெரிவித்துள்ளார்.