குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புதுச்சேரிக்கு இரண்டு நாள் அரசு பயணமாக இன்று வந்தார். சென்னைலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி சென்ற குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிற்கு, துணைநிலை ஆளுநர் தமிழிசை, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அரசியல் கட்சித் தலைவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
புதுச்சேரி ஜிப்மர் வளாகத்தில் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் புதிதாக ரூபாய் 17 கோடியில் நிறுவப்பட்டுள்ள புற்றுநோய்களுக்கான கதிரியக்க இயக்க சிகிச்சை கருவியை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மக்களுக்கு அர்ப்பணித்தார். தேசிய ஆயுஷ் இயக்கத்தின் கீழ் வில்லியனூரில் 50 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனையை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு திறந்து வைத்தார்.
விழாவில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு,
என்னைப் பொறுத்தவரை, எனது முதல் வருகை, ஸ்ரீ அரவிந்தரின் 150 வது பிறந்த நாள் கொண்டாட்டங்களுடன் இணைந்திருப்பது, மிகுந்த ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த விஷயம். வந்தே மாதரம் பத்திரிகையில் நாட்டிற்கு முழுமையான சுதந்திரம் வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படையாக வெளிப்படுத்திய இந்தியாவின் முதல் அரசியல் தலைவர்களில் இவரும் ஒருவர். அன்னாரது தெய்வீக ஆன்மாவை வணங்கி தலை வணங்குகிறேன்.
வரலாற்றின் வெவ்வேறு கட்டங்களில் வெவ்வேறு காரணங்களுக்காக புதுச்சேரி வெவ்வேறு மக்களை ஈர்த்துள்ளது என்பது மிகவும் சுவாரஸ்யமானது. சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரியில் பிரெஞ்சுக்காரர்கள் தங்கள் வர்த்தக நிலையங்களை நிறுவினர். இந்தியாவில் உள்ள பிரெஞ்சு பிரதேசங்களின் கவர்னர் ஜெனரலாக இருந்த டூப்ளே, புதுச்சேரியை பிரெஞ்சுக்காரர்களின் முக்கிய கோட்டையாக மாற்ற விரும்பினார்.
பிரெஞ்சுக்காரர்களின் காலனித்துவ லட்சியங்களுக்கு முற்றிலும் மாறாக, மகரிஷி அரவிந்தர் 20 ஆம் நூற்றாண்டில் ஆன்மீக மனநிறைவுக்கான சிறந்த இருப்பிடமாக இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தார். புதுச்சேரியின் அனைத்துப் பகுதிகளிலும் வழிபாட்டுத் தலங்களைக் காணலாம். இன்று அருள்மிகு மணக்குள விநாயகர் கோயிலிலும், திருக்காஞ்சி கோயிலிலும் சக குடிமக்களுக்காக இறைவனிடம் ஆசி பெறப் போகிறேன்.
புதுச்சேரியின் ஆன்மீக அம்சம், யோகாவை ஊக்குவிக்கும் மிக முக்கியமான மையங்களில் ஒன்றாகும். சர்வதேச யோகா திருவிழாவைக் கொண்டாட ஒவ்வொரு ஆண்டும் ஒரு பெரிய கூட்டத்தை இது காண்கிறது.
பிரெஞ்சுக் குடியேற்றப் பகுதியில் வாழ்ந்தாலும், புதுச்சேரி வாசிகள் சுதந்திரப் போராட்டத்தில் சம அளவில் தீவிரமாக இருந்தனர். சிறந்த எழுத்தாளர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தாயகமாக புதுச்சேரி திகழ்கிறது. கவிஞர் பாரதிதாசன் இங்குதான் பிறந்தார். இந்த புண்ணிய பூமி ஒரு காலத்தில் மகா கவிஞரும், தேசியவாதியும், சமூக சீர்திருத்தவாதியுமான மகாகவி சுப்பிரமணிய பாரதியின் இருப்பிடமாக இருந்தது. புதுச்சேரியில் தனது தேசியவாத நடவடிக்கைகளை மேற்கொண்ட அவர், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தார். பிரபல தமிழறிஞரும், சுதந்திரப் போராட்ட வீரருமான வ.வே.சு.அய்யர் பாரதியாரின் சமகாலத்தவராவார்.
புதுச்சேரியின் அரசியல் மற்றும் சமூக புவியியல் அசாதாரணமானது. இந்த யூனியன் பிரதேசத்தின் நான்கு பிராந்தியங்களில், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ஏனாம் ஆகியவை வங்காள விரிகுடாவில் அமைந்துள்ளன. மாஹே, அரபிக் கடலில் அமைந்துள்ளது. மேலும், யூனியன் பிரதேசத்தின் நான்கு பிராந்தியங்களும் தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கேரளாவின் பகுதிகளுக்குள் அமைந்துள்ளன.
இங்கு புதுச்சேரியில், பல்வேறு கலாச்சாரங்களின் கலவையை நாம் காண்கிறோம். வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்திய நெறிமுறைகளைக் கொண்டாடும் துடிப்பான கலாச்சாரப் பாரம்பரியத்தை நீங்கள் முன்னெடுத்துள்ளீர்கள். தமிழ், தெலுங்கு, மலையாள சாயல்கள் தென்படுகின்றன. பிரெஞ்சுக்காரர்களின் தாக்கமும் அப்படித்தான்.
கட்டிடக்கலை, திருவிழாக்கள் மற்றும் வாழ்க்கை முறைகள், நல்லிணக்கத்துடன் ஒன்றிணையும் பல்வேறு தாக்கங்களை பிரதிபலிக்கின்றன. புதுச்சேரியின் துடிப்பான கலாச்சாரம், தமிழ்நாட்டில் நிலவும் இசை மற்றும் நடன வடிவங்களிலிருந்து அதிக ஆற்றலைப் பெறுகிறது. பிரெஞ்சு பாரம்பரியமான முகமூடி திருவிழாவில் மகிழ்ச்சி உணர்வு வெளிப்படுகிறது. உண்மையில், புதுச்சேரி, பிரான்சுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவின் பாலமாகும்.
அளவில் சிறியதாக இருக்கும் இந்த யூனியன் பிரதேசம், மிகவும் அழகானது. “சிறியதுதான் அழகானது” என்ற சொற்றொடரை இது நிரூபிக்கிறது.
ஒரு புகழ்பெற்ற சர்வதேச நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சமூக முன்னேற்ற குறியீட்டு மதிப்பெண் 2022 இல் புதுச்சேரி முதலிடத்தில் உள்ளது என்பதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.
• தனிநபர் சுதந்திரம் மற்றும் தேர்வு,
• தங்குமிடம்
• குடிநீர் மற்றும் சுகாதாரம்
ஆகிய அளவுருக்களில் இது மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளது:
நாட்டிலேயே அதிக கல்வியறிவு பெற்ற பகுதியாக புதுச்சேரி திகழ்வது பாராட்டுக்குரியது. இங்கு பாலின விகிதம் பெண்களுக்கு சாதகமாக உள்ளது. புதுச்சேரி மக்கள் பாலின சமத்துவத்தில் நம்பிக்கை கொண்டுள்ளனர் என்பதை இந்த உண்மைகள் நிரூபிக்கின்றன. இவை உண்மையான முற்போக்கு மனநிலையின் குறிகாட்டிகளாகும். புதுச்சேரி மக்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான நவீன மற்றும் உணர்திறன் அணுகுமுறைக்காக நான் அவர்களைப் பாராட்ட வேண்டும்.
குறிப்பாக புதுச்சேரியில் உயர்கல்வி சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளதை பாராட்டுகிறேன். இங்கு சிறந்த கல்வி நிறுவனங்கள் உள்ளன. பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் உயர்கல்விக்காக இங்கு வந்து செல்கின்றனர்.
புற்றுநோயாளிகளுக்கு கதிரியக்க சிகிச்சை அளிக்க இது பயன்படுத்தப்படும் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இந்த உபகரணம் கதிர்வீச்சை துல்லியமாக குறிவைப்பதன் மூலம் கதிர்வீச்சு வெளிப்பாட்டைக் குறைக்கும். இந்த இயந்திரம், நோய் தீர்க்கும் கதிர்வீச்சு சிகிச்சையை வழங்குவதற்கான நிறுவனத்தின் திறனை அதிகரிக்கும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். இது மலிவான மேம்பட்ட மருத்துவ சேவையை அதிகரிக்கும்.
தேசிய ஆயுஷ் இயக்கத்தின் கீழ் வில்லியனூரில் மருத்துவமனையை திறந்து வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மருத்துவமனை மலிவான மருத்துவ சேவையையும் வழங்கும். இந்த மருத்துவமனை பல்வேறு மாற்று மருத்துவ முறைகளின் கீழ் மருத்துவ சேவைகளை வழங்கும் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இந்த மருத்துவமனை முழுமையான ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதுடன் மக்களுக்கு உயர்தர மருத்துவ சேவைகளையும் வழங்கும் என்று நான் நம்புகிறேன்.
ஆன்மீகச் சுற்றுலா என்று வர்ணிக்கப்படக்கூடிய ஒரு அற்புதமான இடமாக புதுச்சேரி திகழ்கிறது. ஆன்மீகச் சுற்றுலா, உலகளவில் வேகமாக புகழ்பெற்று வருகிறது. இது இந்த பிராந்தியத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு வலுவான ஊக்கத்தை வழங்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. ‘சுதேச தர்ஷன்’ திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சுற்றுலா வளர்ச்சியுடன், மருத்துவச் சுற்றுலா மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த சுற்றுலா தொடர்பான நடவடிக்கைகளும் ஊக்குவிக்கப்படும்.
இறுதியாக, இந்த தனித்துவமான மற்றும் சிறப்பு வாய்ந்த யூனியன் பிரதேசமான புதுச்சேரி, தேசிய அளவிலும், உலகளவிலும், தனித்துவமான முத்திரையைப் பதித்துள்ளது என்பதை நான் சொல்ல விரும்புகிறேன். புதுச்சேரி மக்கள் இந்த யூனியன் பிரதேசத்தை இன்னும் உயர்ந்த வளர்ச்சி மற்றும் சிறப்பிடத்திற்கு கொண்டு செல்வார்கள் என்று நான் நம்புகிறேன். புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் ஒளிமயமான, வளமான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன்.