ஊழலுக்கு எதிராக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையில் 12-வது நாளான நேற்று சிவகாசியில் நடைபயணம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பட்டாசு தொழிலாளர்கள், தூய்மை பணியாளர்களிடம் புகார் மனுக்களைப் பெற்று கொண்டு யாத்திரையை மேற்கொண்டார்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,
“இந்தியாவின் ஒட்டு மொத்த உற்பத்தியில் 90 சதவீதம் பட்டாசும், 70 சதவீதம் தீப்பெட்டியும் சிவகாசியில் உற்பத்தி செய்யப்படுகிறது. உலகில் மிகப்பெரிய அளவிலான அச்சுத் தொழிலும் சிவகாசியில் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. எந்த ஒரு நகரிலும் இது போன்ற தொழில் வளர்ச்சி இல்லை. 2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது ஈரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில், சீனப் பட்டாசுகளால் சிவகாசி அழிந்துக் கொண்டிருக்கிறது என மோடி பேசினார். மோடி பிரதமராக பதவியேற்ற பின் பட்டாசு பிரச்சினைகளைத் தீர்க்க பல்வேறு நவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அந்த வகையில் சீனப் பட்டாசுகளுக்குத் தடை விதித்து பட்டாசு தொழிலுக்கும், மலிவு விலை சீன லைட்டர்களுக்குத் தடை விதித்து தீப்பெட்டி தொழிலுக்கும் பிரதமர் மோடி ஆதரவாக உள்ளார்.
கடந்த ஆண்டு தடை இல்லாமல் தீபாவளியைக் கொண்டாடினோம். அதேபோல் இந்த ஆண்டும், தடை இல்லாத தீபாவளியாக கொண்டாடுவோம். பாஜக அரசு மத்தியில் ஆட்சியில் உள்ளதால் மட்டுமே சிவகாசியில் பட்டாசு தொழில் பிரச்சனை இன்றி வேகமாக வளர்ந்து வருகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சிவகாசி தொழில் வளர்ச்சிக்காக வரி சலுகை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
வெளிநாட்டு என்.ஜி.ஓக்கள் மூலமாகவே பட்டாசு தொழிலுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டு இடையூறு ஏற்படுத்தப்படுகிறது. பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க நிரந்தர தீர்வாக பட்டாசைத் தடை செய்ய வேண்டும் என திமுக அமைச்சர் துரைமுருகன் கருத்து தெரிவித்தார்.
கர்ம வீரர் காமராஜர் மூடிக் கிடந்த 6 ஆயிரம் பள்ளிகளையும், 12 ஆயிரம் புதிய பள்ளிகளையும் சேர்த்து 9 ஆண்டுகால ஆட்சியில் சுமார் 18 ஆயிரம் அரசு பள்ளிகளைத் திறந்தார். அதனால் 1954 கல்வி அறிவு பெற்றவர்கள் வெறும் 7 சதவீதம் தான். 1963ல் 37 சதவீதமாக உயர்ந்தது. ஆனால் காமராஜரின் சாதனைகளுக்குத் திமுக ஸ்டிக்கர் ஓட்டி உரிமை கொண்டாடுகிறது.
தமிழகத்தில் உள்ள சிவகாசி, தென்காசி நகருக்கும் உத்திரப்பிரதேசத்தில் உள்ள காசி இரண்டுக்கும் உள்ளத் தொடர்பை உலகறிய செய்வதற்காக காசியில் தமிழ்ச் சங்கமம் நடத்தினார் மோடி.
பிரதமர் மோடி தமிழகத்தில் பிறக்காத தமிழனாக, செல்லும் இடங்களில் எல்லாம் தமிழின் பெருமையைத் குறித்து பேசி வருகிறார். ஆனால் தமிழகத்தில் பிறந்து தமிழகத்தில் வளர்ந்து தமிழகத்தை நம்பர் 1 மாநிலமாக மாற்றுவேன் என கூறிய தமிழக முதல்வர் ஸ்டாலின் கடன் வாங்குவதிலும், மது விற்பனையிலும் தான் முதல் மாநிலமாக மாற்றிருக்கிறார்.
மதுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு மையம் தொடங்கும் தமிழக அரசு, மது கடைகளை மூட முன்வரவில்லை. 2024 பாராளுமன்றத் தேர்தல் என்பது இளைஞர்களை படி, படி என்று கூறும் மோடிக்கும், குடி, குடி என்று கூறும் ஸ்டாலினுக்கும் இடையிலானது” என்று தெரிவித்தார் பாஜக தலைவர் அண்ணாமலை.