ஊழலுக்கு எதிரான பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் “என் மண் என் மக்கள்” பாத யாத்திரையின், 13-வது நாளான இன்று சாத்தூரில் மக்களின் எழுச்சியோடு நடைபெற்றது. அண்ணாமலை நடந்து வரும்வழியெங்கும் மக்கள் கூட்டம் நிரம்பி இருந்தது . சாலைகளின் இருபுறமும் நின்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் கோரிக்கை மனுக்களை மக்கள் கொடுத்தனர். பலதரப்பட்ட மக்களின் பெருங்கூட்டத்தில் உரையாயற்றிய அண்ணாமலை,பிரதமர் நரேந்திர மோடியால் தமிழக மக்கள் பெற்ற நன்மைகளைப் புள்ளிவிவரங்களோடு பட்டியலிட்டார்.
தமிழ்நாட்டில் மட்டுமே முத்ரா கடன் திட்டத்தில் மூலம் இரண்டு லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. சிவகாசி மாவட்டத்தினுடைய பட்டாசின் மொத்த ஏற்றுமதி 6000 கோடி ரூபாய் ஆகும்.
முத்ரா திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வீட்டிலும் தொழில் முனைவோர்களாக மாறி உள்ளனர். இதுதான் பிரதமர் மோடியின் முகவரி, இது இந்தியாவின் மாற்றம், இந்தியாவின் வளர்ச்சி ஆக உள்ளது.
பிரதமர் மோடியின், மத்திய அரசின் திட்டங்களை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இத்தகையத்திட்டங்கள் லஞ்சம் லாவண்யம் இல்லாமல் செயல்படுகிறது. துபாயில் இருந்து வரக்கூடிய 6000 கோடி ரூபாய் இது இல்லை. மத்திய அரசின் திட்டங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்தால் மட்டும் போதும், வீடு தேடி உங்களுடைய வங்கிக்குப் பணம் வந்து சேரும். இதுதான் கடந்த ஒன்பது ஆண்டுகளாக இந்தியாவின் புதிய மாற்றமாக உள்ளது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வீடு கட்டி கொடுக்கும் திட்டத்தில் 85 சதவீத வீடுகள் பெண்கள் பெயரில் பதிவு செய்து கொடுக்கப்படுகிறது.
இரண்டாயிரம் ஆண்டு பழைமையான ஊர். அப்பேறு பெற்ற புண்ணிய பூமி சாத்தூர் . நீங்கள், பெருந்தலைவர் காமராஜரை மூன்று முறை வெற்றி பெற வைத்தவர்கள். நீங்கள் நல்லவர்கள் மட்டுமில்லை நல்லவர்களைக் கண்டுபிடிப்பதிலும் வல்லவர்கள் . சாத்தூருக்கு நிகர் சாத்தூர் தான்.
கடந்த 9 ஆண்டுகள் இந்தியாவின் வளர்ச்சி அதிகமாக உள்ளது. சாத்தூர் காரசேவு பிரசித்தி பெற்றது. இதற்கு, உலகம் முழுவதுமே மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. சாத்தூர் காரசேவு புவிசார் குறியீடு பெற நீங்கள் காத்திருக்கிறீர்கள். சாத்தூர் காரசேவு புவிசார் குறியீடு பெற்று விட்டால் உலகம் முழுவதும் ஏற்றுமதிக்குநல்ல வாய்ப்பு ஏற்படும். தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பொருட்கள் புவிசார் குறியீடு பெற பிரதமர் மோடி பெரும் பங்காற்றியுள்ளார். சாத்தூர் காராசேவு புவிசார் குறியீடு பெற பாஜக உறுதியாக துணையிருக்கும்.
2000 ஆண்டுகள் பழைமையான சாத்தூரை, இன்னும் வளர்ச்சி பாதையில் கொண்டு போகாமல் இருக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் தமிழகத்தின் ஆட்சியாளர்கள் என்று அனைவருக்கும் தெரியும். சாத்தூரின் வளர்ச்சி, போதுமான வளர்ச்சி இல்லை என்பது நிதர்சனமான உண்மை.
சாத்தூர் பகுதியில் 30 நாளைக்கு ஒரு முறை தான் குடிதண்ணீர் வருகிறது, இதனைச் சேமிக்க தனியாக கட்டணம் கொடுத்து தொட்டி வாங்கி வைக்கும் சூழல் உள்ளது. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி இங்குள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் தண்ணீர் குழாய் போட்டுக் கொடுத்துள்ளார், ஆனால் மாநில அரசு அந்தக் குழாயில் தண்ணீர் கூட கொடுக்க முடியாத அவல நிலையில் உள்ளது. 1923 ஆம் ஆண்டில் தொழிற்சாலைகள் சாத்தூர், விருதுநகரில் வந்தது.
இந்தியாவின் பிரதமராக நேரு இருந்தபோது, 1950, 1951ஆம் காலகட்டத்தில், சாத்தூரில் இருந்து எட்டு பேர் ,அன்றைய தொழில்துறை அமைச்சராக சாம் பிரசாத் முகர்ஜியைச் சந்தித்து, தற்போது தான் தீப்பெட்டி தொழிற்சாலையை சிறிதாக தொடங்கியுள்ளோம், நார்வே நாட்டுக்காரர்கள் எங்களை வளர விடாமல் தடுக்கிறார்கள் எனவும், எங்களுக்காக நீங்கள் எங்கள் கூட நிற்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். நார்வே தீப்பெட்டி தொழிற்சாலை யார் வைத்திருந்தார்களோ அவர்களை ஓரம் கட்டி வைத்துவிட்டு, சாத்தூரில் தீப்பெட்டி தொழிற்சாலை வளர்வதற்கு முதன்மை காரணமாக இருந்தவர் சாம் பிரசாத் முகர்ஜி. அவர் இந்துமகாசபையின் தலைவராக இருந்தவர். பிற்காலத்தில் ஜன சங்கம் பின்னர் அதுவே பாஜகவாக மாறி உள்ளது. அந்தக் கட்சியின் இருந்து நாங்கள் வந்திருக்கிறோம்,
இன்றைய தினம் நம்மூர் தீப்பெட்டி தொழிற்சாலைகள் வளரவேண்டும் என்பதற்காக, சீனாவில் இருந்து 20 ரூபாய்க்கு கீழ் உள்ள லைட்டரை பிரதமர் மோடி தடை செய்துள்ளார். கடந்த ஒரு மாதமாக சாத்தூரின் தீப்பெட்டி குறித்து அனைவரும் பேச ஆரம்பித்தனர். சாத்தூர் விருதுநகர் ஆகிய இரண்டையும் சேர்த்து 3389 தீப்பெட்டி தொழிற்சாலைகள் இருக்கிறது. கடந்த 9 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு, சிறு குறு நிறுவனங்களுக்கு 26,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
1967லிருந்து திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இந்தியாவில் மிகவும் பின்தங்கிய 112 மாவட்டங்களில் விருதுநகர், இராமநாதபுரம் மாவட்டங்கள் உள்ளது. 2018 ஆம் ஆண்டில் பிரதமர் மோடி, இந்த பின்தங்கிய 112 மாவட்டத்திற்கெல்லாம் நிதி ஆயோக்கு மூலம் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் விருதுநகர் முன்னேறும் மாவட்டமாக மாறி உள்ளது. மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கு இங்குள்ள திமுக ஸ்டிக்கர் ஒட்டும் பணியை மட்டுமே செய்து வருகிறது.
இந்தியாவில் புதிதாக தொடங்க கூடிய 7 ஜவுளி பூங்காக்களில் ஒன்று தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் 2000 கோடி ரூபாயில் அமைய உள்ளது, இதனால் 22,000 பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு உருவாகும். பெருந்தலைவர் காமராஜர் மூடி கிடந்த 6 ஆயிரம் பள்ளிகளையும், 12 ஆயிரம் புதிய பள்ளிகளையும் சேர்த்து 9 ஆண்டுகால ஆட்சியில் 18 ஆயிரம் அரசு பள்ளிகளை திறந்தார். பிரதமர் நரேந்திர மோடியோ இந்தியா முழுவதுமே, ஐஐடி, ஐஐஎம், பொறியியல் கல்லூரி, என்று உயற்கல்விக் கூடங்களைத் திறந்து வருகிறார் . தமிழகத்தில் மட்டுமே 11 மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.
காமராஜரும் பிரதமர் மோடியும் படி, படி என சொல்கிறார்கள். குடி குடியென சொல்லக்கூடிய முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தை குடிகார மாநிலமாக முதல்வர் ஸ்டாலின் மாற்றிவிட்டார்.
முதல்வர் ஸ்டாலினுக்குக் குடியரசு தினத்திற்கும் சுதந்திர தினத்திற்கும் வித்தியாசம் தெரியாது. செப்டம்பர் மாதம் 21ம் தேதி 1967இல் தமிழகத்தில் மது ஒழிப்பு மாநாடு நடக்கிறது. முதலமைச்சராக ஆட்சி பொறுப்பேற்ற அண்ணா, ‘குடித்துவிட்டு மனைவி மக்களை தாக்கும், குடிகாரர்களிடம் அடிபடும் பெண்களின் அழும் குரல் அதிகமாக கேட்கிறது, அந்த அழும் ஒலியை என்னால் தாங்க முடியவில்லை, இனி மது கடைகளைத் திறப்பதை ஒரு நாளும் அனுமதிக்க மாட்டேன்’ என அறிஞர் அண்ணா தெரிவித்தார்.
ஆனால் இன்றைக்கு முதல்வர் ஸ்டாலினின் காதுகளில் சிரிப்பு குரல் கேட்கிறதா?, அண்ணா மீண்டும் ஒரு பதிவை செய்கிறார், ‘மதுவினால் அரசிற்கு வரக்கூடிய வருமானம் என்பது புழுத்துப்போன தொழுநோயாளியின் கைகளில் உள்ள வெண்ணெய்க்குச் சமமானது, அப்படிப்பட்ட வருமானம் அரசுக்கு தேவை இல்லை’ என அண்ணா தெரிவித்தார்.
மதுக்கடைகளைத் திறந்து, திறந்து பெண்களுடைய தாலியை அறுப்பதற்குக் காரணமாக இருக்கக்கூடிய தமிழக அரசும் முதல்வர் ஸ்டாலினும் கண்ணாடியைப் பார்த்து, குடிகார மாநிலமாக தமிழகத்தை மாற்றியதற்கு மன்னிப்பு கேட்டு மதுக் கடைகளை மூட ஆரம்பிக்க வேண்டும் என்பது தான் பாரதிய ஜனதா கட்சியின் கோரிக்கை ஆகும்.
எப்படி இருந்த தமிழகத்தை ஊழல் திமுக அரசு எப்படி மாற்றி உள்ளது. இந்தியாவிலேயே அதிகமாக கடன் வாங்கிய மாநிலமாக தமிழகம் இருக்கிறது. தமிழகம் 7 லட்சத்து 53 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளது. ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் மூன்று லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளது. தமிழகத்தைக் கடன்கார மாநிலமாகவும், குடிகார மாநிலமாகவும் திமுக மாற்றி உள்ளது.
கடந்த 9 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி 10 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் தமிழகத்திற்கு வழங்கியுள்ளார். யாரெல்லாம் மதுவிற்கு அடிமையாகி அரசு நடத்தக்கூடிய மறுவாழ்வு சிகிச்சை முகாமில் சென்று வருகிறார்களோ, அவர்களுக்கு அரசு வேலை என மா.சுபிரமணியன் தெரிவித்துள்ளார். மறுவாழ்வு சிகிச்சை மையத்தில் சென்று வந்தால் அரசு வேலை, எந்த மாதிரியான சமூகத்தைத் திமுக உருவாக்குகிறது என்று பாருங்கள். இதுபோன்ற திமுக அரசை நாம் வைத்திருப்பது வெட்கக்கேடு . இதனை திருத்துவதற்கு ஒரு வாய்ப்பாக 2024 நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது.
இங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினரை யாராவது பார்த்து உள்ளீர்களா? பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில், ”2018 ஆம் ஆண்டு நம்பிக்கை இல்லாத் தீர்மானம் என் மீது கொண்டு வந்தீர்கள், 303 எம்பிகள் கொடுத்து மக்கள் மறுபடியும் ஆட்சியில் அமர்த்தினார்கள், 2023 மறுபடியும் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தீர்கள், 400 எம்பிக்களுடன் மறுபடியும் மக்கள் என்னை ஆட்சியில் அமர்த்துவார்கள். 2028 மீண்டும் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைப் போடுங்கள்” என மோடி கூறியதாக தெரிவித்தார்.
தமிழக நாடாளுமன்ற எம்பிக்கு கிடைக்க கூடியதாக, ஏர் இந்தியா விமானத்தில் 12 டிக்கெட் இலவசம், ஒரு தொலைபேசி இலவசம், அவருடைய உதவியாளருக்கு அரசு சம்பளம், நாடாளுமன்ற உணவகத்தில் சாப்பாடு 25 ரூபாய், இந்த நான்கையும் தவிர தமிழ்நாட்டுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதையும் செய்யவில்லை எனத் தெரிவித்தார்.
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் 400 நாடாளுமன்ற உறுப்பினருடன், பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் இதில் தமிழகம், புதுச்சேரியில் இருந்து 40 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொடுக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
ஊழல் செய்யக்கூடிய ஆட்சி, கொலைகார ஆட்சி, குடிகார ஆட்சி, குடும்பத்திற்காக நடத்தக்கூடிய ஆட்சியிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும். கருணாநிதிக்கு பின்னர் ஸ்டாலின், ஸ்டாலின் பின் உதயநிதி, உதயநிதிக்கு பின் இன்பநதி என நான்காம் தலைமுறைகாக குடும்ப ஆட்சி நடக்கிறது. சாமனியனின் ஆட்சியாக பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி உள்ளது.
சாமானிய மனிதர் பிரதமர் மோடி, மூன்றாவது முறையாக பிரதமராவதற்குத் தமிழன் துணை இருப்பான் என்ற செய்தியை உரக்கச் சொல்லி இந்த யாத்திரை நடைபெற்று வருகிறது. சாத்தூர் குப்பையை மட்டுமல்ல, தமிழ்நாட்டின் அரசியல் குப்பையையும் பாரதிய ஜனதா கட்சி சுத்தப்படுத்தும் என தெரிவித்தார்.