ஏஐயை ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது என்றும், விவசாயத்திற்கும் ஏஐ பயன்பட வேண்டும் எனவும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் 2வது நாள் நிகழ்வில் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
இந்தியா தலைமை பொறுப்பில் டெல்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் 2-வது நாள் மற்றும் இறுதி நாள் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி வருகை தந்தார். இதனை தொடர்ந்து, பாரத் மண்டபத்திற்கு வருகை தந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ், பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் ஆர்.மார்கோஸ், வியட்நாம் பிரதமர் உள்ளிட்ட சிறப்பு அழைப்பாளர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, பாரத் மண்டபத்தில் உலகத் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையே அனைவருக்கும் பயன் அளிக்கும் வகையிலான ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும் என கூறினார்.
2026 பிரிக்ஸ் மாநாட்டில் ‘பின்னடைவை எதிர்கொள்ளும் திறன், புதுமை, ஒத்துழைப்பு, நிலைத்தன்மை’ ஆகிய 4 முக்கிய அம்சங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் பிரிக்ஸ் இணைப்பு திட்டத்தின் மூலம் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு, பெண் தொழிலாளர் பங்கேற்பு, சமூக பாதுகாப்பு மற்றும் திறன் வளர்ப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ஒத்துழைப்பு இணையதளத்தை உருவாக்கும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதில் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறைக்கு முக்கியத்துவம் அளித்துள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற சீன அதிபர் ஷி ஜின்பிங் டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் சீனா புறப்பட்டு சென்றார். இதேபோன்று, எத்தியோப்பியப் பிரதமர் அபி அகமது அலியும் டெல்லியில் இருந்து புறப்பட்டார்.
















