பெங்களூரு மாநகரில் இருந்து வெளியேறும் கழிவுநீரில் சுமார் 47 சதவீதம் சுத்திகரிக்கப்படாமல் காவிரி மற்றும் தென்பெண்ணை ஆறுகளில் கலந்து தமிழகத்துக்கு செல்வதாக கர்நாடக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு மாநகரின் கழிவுநீர் காவிரி, தென்பெண்ணை ஆறுகளில் கலப்பதாக, பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், கர்நாடக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, வடிகால் வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெங்களூருவில் தினசரி 2,825 எம்.எல்.டி. கழிவுநீர் வெளியேறும் நிலையில், 1364 எம்.எல்.டி. மட்டுமே சுத்திகரிக்கப்படுவதாக தெரிவித்தார்.
சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் காவிரியுடன் கலப்பதாகவும், மற்றொரு பகுதி தென்பெண்ணை ஆற்றில் கலந்து தமிழகத்துக்கு செல்வதாகவும் கூறினார். காவிரி, தென்பெண்ணை ஆறுகளில் கழிவுநீர் கலப்பதாக தமிழக அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வந்த நிலையில், கர்நாடக அமைச்சரின் ஒப்புதல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
















