தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களைப் பரிந்துரைக்கும் 3 பேர் அடங்கிய குழுவில் இருந்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை நீக்கும் மசோதாவை மாநிலங்களவையில் மத்திய அரசு நேற்று தாக்கல் செய்தது.
தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களை, இதுவரை மத்திய அரசு பரிந்துரையின் பேரிலேயே நியமிக்கப்பட்டு வந்தனர். ஆனால், இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய 3 பேர் கொண்ட குழுதான் தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்தது. மேலும் அப்போது, நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றும் வரை இந்த விதிமுறையே தொடரும் என்றும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், மத்திய பா.ஜ.க. அரசு தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக புதிய மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்திருக்கிறது. இந்த மசோதாவில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை நீக்கவிட்டு, அதற்குப் பதிலாக, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகியோர் அடங்கிய குழுவின் பரிந்துரையின் பேரில், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களை குடியரசுத் தலைவர் நியமிப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே 2024 பிப்ரவரி மாதம் ஓய்வு பெறுகிறார். இதனால், தேர்தல் ஆணையர் குழுவில் ஒரு காலியிடம் ஏற்படும். இந்த சூழலில், மேற்கண்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மசோதா நிறைவேற்றப்படுமானால் புதிய தேர்தல் ஆணையரைப் புதிய தேர்வுக்குழுவே தேர்வு செய்து குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்யும்.