பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 10-வது முறையாக செங்கோட்டையில் இன்று தேசியக்கொடி ஏற்றி இருக்கிறார். இதன் மூலம், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் சாதனையை சமன் செய்திருக்கிறார்.
நாடு முழுவதும் இன்று 77-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, இன்று காலை 7.30 மணியளவில் பாரத பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியே ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். விழாவில், நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த 1,800 பேர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
இதன் காரணமாக, தேசிய தலைநகர் டெல்லி முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக, கடந்த 26-ம் தேதியே டெல்லி மாநிலம் எஸி.பி.ஜி. பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. 10,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.
இது ஒருபறம் இருக்க, பாரத பிரதமர் நரேந்திர மோடி, இன்று 10-வது முறையாக செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி இருக்கிறார். அதாவது, 2014-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்றவர், தொடர்ச்சியாக 2019 தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் பிரதமரான நிலையில், தொடர்ச்சியாக இந்த ஆண்டோடு 10-வது முறையாக செங்கோட்டையில் மூவர்ணக்கொடியை ஏற்றி இருக்கிறார்.
முன்னதாக, மறைந்த பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு 17 முறையும், இந்திரா காந்தி 16 முறையும் செங்கோட்டையில் கொடியேற்றி இருக்கிறார்கள். இதன் பிறகு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 10 முறை கொடியேற்றி இருக்கிறார். இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி 10 முறை கொடியேற்றி இருக்கிறார். இதன் மூலம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் சாதனையை சமன் செய்திருக்கிறார்.