பெண்கள் தலைமையிலான வளர்ச்சிதான் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லும். அந்த வகையில், இன்று இந்தியாவில் பெண் விஞ்ஞானிகள் சந்திராயன் பணியை முன்னெடுத்து வருகின்றனர் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி பெருமையுடன் கூறினார்.
நம் நாட்டின் 77-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பாரத பிரதமர் மோடி மூவர்ணக் கொடியேற்றி, நாட்டு மக்களுக்கு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர், “பெண்கள் தலைமையிலான வளர்ச்சிதான் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும். அந்த வகையில், சிவில் ஏவியேஷன் துறையில் அதிக பெண் விமானிகளை கொண்ட நாடு இந்தியா என்று பெருமையுடன் சொல்லலாம்.
மேலும், இன்று நமது பெண் விஞ்ஞானிகள் தான் சந்திராயன் விண்கலத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதோடு, பெண்கள் தலைமையிலான வளர்ச்சியின் முக்கியத்துவத்தை ஜி20 நாடுகள் அங்கீகரித்து வருகின்றன. ஆகவே, எனது நாட்டின் தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களின் திறமைக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அதேபோல, விவசாயத் துறையில் இந்தியா முன்னேறி வருவதற்கு விவசாயிகள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்தியா நவீனமயமாகி வரும் நிலையில், தொழிலாளர்கள் மற்றும் அவர்களது பங்களிப்புக்காக நன்றி கூறுகிறேன்” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.