போலியான பயண முகவர்கள் மூலம் ஏமாற்றப்பட்டு, லிபியாவில் சிறை மற்றும் தனிநபர்களிடம் கொடுஞ்சித்ரவதைகளை அனுபவித்து வந்த 17 இந்தியர்கள் மீட்கப்பட்டு, இன்று நாடு திரும்பினார்கள்.
வெளிநாட்டு வேலைக்குச் செல்ல வேண்டும் என்கிற மோகம் இந்திய இளைஞர்கள் இடையே நிலவி வருகிறது. இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சில தனியார் பயண முகவர்கள், இதுபோன்ற இளைஞர்களை ஏமாற்றி, பணத்தை மோசடி செய்வது ஒருபுறம் அரங்கேறி வருகிறது. இன்னொருபுறம், பெரிய நாடுகளுக்கு நல்ல வேலைக்கு அனுப்புவதாகக் கூறி, வட அமெரிக்க, அரபு நாடுகளுக்கு அடிமை வேலைக்கு அனுப்புவதும் நடந்து வருகிறது.
இந்த நிலையில்தான், பஞ்சாப் மற்றும் டெல்லியைச் சேர்ந்த 18 இளைஞர்கள் அங்குள்ள சில தனியார் பயண முகவர்களை நாடி இருக்கிறார்கள். அப்போது, அந்த இளைஞர்களை இத்தாலி நாட்டுக்கு லாபகரமான வேலைக்கு அனுப்புவதாக பயண முகவர்கள் கூறியிருக்கிறார்கள். தொடர்ந்து, 18 பேரையும் கடந்த பிப்ரவரி மாதம் துபாய்க்கு அனுப்பி இருக்கிறார்கள். துபாயில் சிலரை அரபு ஷேக்குகளுக்கு அடிமையாக விற்கப்பட்டிருக்கிறார்கள். மற்றவர்கள் அங்கிருந்து எகிப்துக்கு அனுப்பப்பட்டு, இறுதியாக வட அமெரிக்க நாடான லிபியாவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.
இதன் பிறகு, ஜூவாராவிலுள்ள அவர்களது முகவர்களால் உள்ளூர் கட்டுமான நிறுவனத்துக்கு 12 பேர் விற்கப்பட்டிருக்கிறார்கள். அங்கு சரியான உணவு, உறக்கம் இன்றி சித்ரவதைக்கு உட்படுத்தப் பட்டிருக்கிறார்கள். எனவே, 10 பேர் அங்கிருந்து தப்பி வந்திருக்கிறார்கள். ஆனால், கட்டுமான நிறுவனம் அளித்த புகாரின் பேரில் சட்ட விரோதமாக லிபாயாவுக்குள் நுழைந்ததாகக் கூறி 10 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, துபாயில் விற்கப்பட்டவர்களும் நீண்ட சித்ரவதைக்குப் பிறகு, லிபாயாவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். இதன் பிறகுதான், தங்களை அனுப்பியவர்கள் போலி முகவர்கள் என்பது அந்த இளைஞர்களுக்குத் தெரியவந்தது.
இதையடுத்து, தங்களது குடும்பத்தினரைத் தொடர்புகொண்ட இளைஞர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைச் சொல்லி வருந்தி இருக்கிறார்கள். அதேசமயம், லிபியாவில் இந்திய தூதரகம் இல்லாததால் அவர்களால் எந்த உதவியும் பெற முடியவில்லை. இதைத் தொடர்ந்து, கூகுளில் தேடி அருகிலுள்ள துனீசியா நாட்டின் இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். பின்னர், இத்தகவல் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, துனீசியா தூதரகத்தின் மூலம் மேற்கண்ட 18 பேரையும் மீட்பதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டது. எனினும், பெங்காசியில் விற்கப்பட்ட டோனி என்பவர் சித்ரவதை தாங்காமல் உயிரிழந்து விட்டார். எனினும் மற்றவர்களை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வந்தன. இதன் ஒரு பகுதியாக சிறையில் இருப்பவர்களை மீட்பதற்காக நடவடிக்கைகளையும் தூதரகம் எடுத்து வந்தது. அதன்படி, கடந்த மாதம் 30-ம் தேதி சிறையிலிருந்த 10 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். தொடர்ந்து, மற்றவர்களும் மீட்கப்பட்டு தூதரகம் மூலம் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், அரசுமுறை நடைமுறைகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், 17 பேரும் இன்று இந்தியாவுக்குத் திரும்பினர். அவர்களது உறவினர்கள் கண்ணீர் மல்க அவர்களை வரவேற்றனர். இது காண்போர் மனதை கலங்கச் செய்வதாக இருந்தது.