சந்திரயான்-3 விண்கலம் எடுத்த நிலவின் நெருக்கமான புகைப்படங்கள் அடங்கிய வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவில் இருந்து 70 கி.மீ தொலைவில் சுற்றிவரும் விக்ரம் லேண்டரில் உள்ள 4வது கேமரா மூலம் இந்தப் புகைப்படங்கள் எடுக்கப் பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, ரூ.610 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட ‘சந்திரயான் – 3’ விண்கலம், ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
பூமியின் சுற்று வட்டப் பாதையில் இருந்து, கடந்த, 5ம் தேதி நிலவின் சுற்று வட்டப் பாதைக்கு சந்திரயான் – 3 விண்கலம் செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, நிலவைச் சுற்றி வருவதற்கான துாரத்தை மாற்றி அமைக்கும் முயற்சிகள், ஆகஸ்ட் 6, 9, 14 மற்றும் 16ம் தேதிகளில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. சந்திரயான் – 3 விண்கலத்தின் செயல்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
சந்திரயான் – 3 விண்கலத்தில் உள்ள, ‘புரபல்ஷன் மாட்யூல்’ எனப்படும் உந்து கலத்தில் இருந்து, நிலவில் தரையிறங்க உள்ள, ‘விக்ரம் லேண்டர்’ சாதனம் கடந்த 17ம் தேதி பிரிந்து சென்றது. இந்த சாதனம் நிலவின் சுற்றுப்பாதையில் சுற்றி வருகிறது. நிலவை ஒட்டி லேண்டர் சுற்றி வருகிறது.
2019ல் ஏவப்பட்ட சந்திரயான் – 2 ஆர்பிட்டர் இப்போதும் நிலவின் சுற்றுவட்ட பாதையில் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. இது ஏழு ஆண்டுகள் செயல்படும் திறன் உடையது. இந்த சந்திரயான் – 2 ஆர்பிட்டர் மற்றும் சந்திரயான் – 3 லேண்டர் சாதனம் இடையே இருவழி தகவல் தொடர்பு நேற்று வெற்றிகரமாக நிறுவப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்தது.
…. and
The moon as captured by the
Lander Imager Camera 4
on August 20, 2023.#Chandrayaan_3 #Ch3 pic.twitter.com/yPejjLdOSS— ISRO (@isro) August 22, 2023
இந்நிலையில் இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி நாளை மாலை தரையிறக்கப்பட உள்ளது. விண்கலத்தின் அனைத்து செயல்பாடுகளும் திட்டமிட்டபடி நடக்கிறது. சந்திராயன்-3 விண்கலம் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
நிலவில் தரையிறங்கும் நிகழ்வு நாளை மாலை 5:20 மணி முதல் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது, விக்ரம் லேண்டர், திட்டமிட்டபடி நாளை மாலை 6:04 மணிக்கு நிலவின் தென்பகுதியில் தரையிறங்க்குகிறது.
லேண்டரில் உள்ள லேண்டர் பொஷிசன் டிடெக்சன் கேமரா மூலம் 70 கி.மீ., தொலைவில் இருந்து எடுக்கப்பட்ட நிலவின் புகைப்படங்கள் அடங்கிய காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது. லேண்டர் தரை இறங்கியவுடன் அதன் உள்ளே இருந்து, ‘ரோவர்’ வாகனம் வெளியே வந்து, நிலவின் மேற்பரப்பில் சுற்றி வந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளது.