இந்தியாவைத் தொடர்ந்து ரஷ்யாவும் நிலவின் தென் துருவத்தை நோக்கி லூனா-25 என்ற விண்கலத்தை கடந்த 11-ஆம் அனுப்பியது. இந்த விண்கலம் இந்தியாவின் சந்திரயான் – 3 நிலவில் தரையிறங்கும் முன்னரே லூனா-25 தென் துருவத்தில் தரையிறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ரஷியா அனுப்பிய ‘லூனா-25’ என்ற விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியது. இந்திய விண்வெளி ஆய்வு மையமான ‘இஸ்ரோ’ நிலவை ஆய்வு செய்வதற்காக ‘சந்திரயான்-3’ விண்கலத்தை கடந்த மாதம் 14-ந் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
இதற்கு முன்பு எந்த விண்கலமும் வெற்றிகரமாக சென்றடையாத நிலையில், நிலவின் தென்துருவத்தை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கிய ‘சந்திரயான்-3’ விண்கலம் நிலவில் தரையிறங்குவதற்கான இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.
‘சந்திரயான்-3’ விண்கலத்துக்குப் பிறகு விண்ணில் ஏவப்பட்ட போதிலும் ‘சந்திரயான்-3’க்கு முன்பே ரஷிய விண்கலத்தை நிலாவில் தரையிறக்க திட்டமிட்டு அதற்கான பணிகளை ரஷிய விண்வெளி ஆய்வு மையமான ரோஸ்கோஸ்மோஸ். மேற்கொண்டுவந்தது.
அதன்படி கடந்த 17-ந் தேதி நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் ரஷியாவின் ‘லூனா-25’ விண்கலம் வெற்றிகரமாக நுழைந்தது. தொடர்ந்து, படிப்படியாக சுற்றுப்பாதையைக் குறைக்கும் பணிகள் நடந்துவந்தன. அதன் தொடர்ச்சியாக ‘லூனா-25’ விண்கலம் இன்று (திங்கட்கிழமை) நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க இருந்தது.
இந்நிலையில் லூனா -25 விண்கலம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிலவில் விழுந்து நொறுங்கியதாக ரோஸ்கோஸ்மோஸ் தெரிவித்தது. முன்னதாக விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இறுதிக்கட்ட சுற்றுப்பாதையைக் குறைப்பதில் சிக்கல் ஏற்பட்டதாகவும், அதனால் விண்கலத்துடனான தொடர்பை இழந்ததாகவும் ரோஸ்கோஸ்மோஸ் கூறியிருந்தது.
அதை தொடர்ந்து, விண்கலத்துடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த விஞ்ஞானிகள் தீவிரமாக முயற்சித்த நிலையில் ‘லூனா-25’ விண்கலம் கணிக்க முடியாத சுற்றுப்பாதையில் நகர்ந்து நிலவின் மேற்பரப்பில் மோதி நொறுங்கியதாக ரோஸ்கோஸ்மோஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் மூலம் 47 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவை ஆய்வு செய்ய ரஷிய எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1976-ம் ஆண்டு ரஷியாவை உள்ளடக்கிய சோவியத் ஒன்றியம் ‘லூனா 24’ விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.