சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் நிகழ்வை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தென்னாப்பிரிக்காவில் இருந்தபடியே இணைய வழியில் காண ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்-3 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) கடந்த மாதம் 14-ம் தேதி விண்ணில் செலுத்தியது. புவி வட்டப் பாதை பயணத்தை வெற்றிகரமாக முடித்த சந்திராயன்-3, கடந்த 1-ம் தேதி நிலவை நோக்கிய பயணத்தைத் தொடங்கியது. நிலவுப் பயணத்தில் 3-ல் 2 பங்கு தூரத்தை கடந்த சந்திரயான்-3, கடந்த 5-ம் தேதி இரவு 7 மணியளவில் நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் செலுத்தப்பட்டது.
இந்த நிலையில், இன்று மாலை 6.04 மணியளவில் சந்திரயான்-3 விண்கலத்தின் ‘லேண்டர்’ சாதனத்தை வெற்றிகரமாக தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்திருக்கின்றனர். இதற்கான முழு முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டிருக்கும் நிலையில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வைக் காண்பதற்காக இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றன.
அதேசமயம், கடந்த 2019-ம் ஆண்டு சந்திராயன்-2 நிலவின் தரையிறங்கும் நிகழ்வின்போது, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் அமர்ந்து பார்வையிட்டார். ஆனால், இம்முறை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்கா சென்றிருக்கிறார். ஆகவே, லேண்டர் தரையிறங்கும் நிகழ்வை பிரதமர் மோடி அங்கிருந்தபடியே இணைய வழியில் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.