சொத்துக் குவிப்பு வழக்கில், தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து மறுவிசாரணைக்கு எடுத்திருக்கிறது. இதன் மூலம் பொன்முடியைத் தொடர்ந்து, மேலும் இரு அமைச்சர்களுக்குச் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சராக இருப்பவர் தி.மு.க.வைச் சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன். இவர், 2006 முதல் 2011 வரையிலான தி.மு.க. ஆட்சி காலத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
இதையடுத்து, இராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, தொழிலதிபர் சண்முகமூர்த்தி ஆகியோர் மீது 2012-ம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது. இவ்வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அமைச்சர் தரப்பில் போதுமான வருவாய் ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டதால், மூவரையும் கடந்த மாதம் 20-ம் தேதி விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதேபோல, தற்போது நிதியமைச்சராக இருக்கும் தங்கம் தென்னரசு, 2006 – 2011 தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தார். அந்தக் காலக்கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தங்கம் தென்னரசு, அவரது மனைவி மணிமேகலை ஆகியோர் மீது 2012-ம் ஆண்டு வழக்கு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தங்கம் தென்னரசுவையும், அவரது மனைவி மணிமேகலையையும் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 13-ம் தேதி நீதிமன்றம் விடுவித்தது.
இந்த நிலையில்தான், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்ட இரு வழக்குகளையும், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்திருக்கிறது. ஏற்கெனவே, சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் பொன்முடியை வேலூர் நீதிமன்றம் விடுவித்த நிலையில், அதை மறுவிசாரணைக்கு எடுத்த அதே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்தான் இவ்விரு வழக்குகளையும் மறுவிசாரணைக்கு எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறுகையில், “சிறப்பு நீதிமன்றங்களில் வழக்குகள் நடத்தப்படும் விதம் கடும் அதிர்ச்சி அளிக்கிறது. நீதிமன்றம் என்பது கட்சிக்கோ, அரசுக்கோ உரித்தானது அல்ல. சுப்பனுக்கும், குப்பனுக்கும் உரித்தானது. அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் ஆகியோர் மீதான வழக்குகளில் பின்பற்றப்பட்ட நடைமுறை மிகவும் தவறானது.
யார் அதிகாரத்துக்கு வந்தாலும், வழக்கை நீர்த்துப்போகவே செய்கின்றனர். இவ்விரு வழக்குகளின் தீர்ப்பை படித்துவிட்டு என்னால் 3 நாட்களாக தூங்க முடியவில்லை. இவ்வழக்கின் தீர்ப்பு நீதிமன்றத்தின் மனச்சாட்சியை உலுக்கியதால் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கப்படுகிறது. இந்த வழக்கில் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை ஆகியோர் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்.