அடுத்து வரும் 2024-ம் ஆண்டு முதல் 11 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
தேசியக் கல்விக் கொள்கை 2020 என்ற மசோதவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் 2020-ம் ஆண்டு ஜூலை 29 -ம் தேதி வழங்கியது. இதன் மூலம் இந்தியாவில் புதிய கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டது . கடந்த 1986-ம் ஆண்டிலான , தேசிய கல்விக் கொள்கைகளுக்கு மாற்றாக இந்த புதிய கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது.
ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை புதிய கல்விக் கொள்கை திட்டம் உருவாக்கப்பட்டது. இதில், கல்வியோடு, தொழிற்கல்வியையும் பயிற்றுவிக்கப்பட உள்ளது. வரும் 2030 -ம் ஆண்டுக்குள் இந்தியா முழுமைக்கும் புதிய கல்விக் கொள்கை திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான தீவிர முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், புதிய கல்விக் கொள்கையின்படி, 11 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத் தேர்வு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
குறிப்பாக, 10 , 11 -ம் வகுப்பு மற்றும் 12 -ம் வகுப்பில் ஆண்டு இறுதித் தேர்வு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இதில், கிடைக்கும் மதிப்பெண்களை வைத்தே, ஒவ்வொரு மாணவரின் எதிர்காலமும் தீர்மானிக்கப்படுகிறது. இதனால், பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்ற நோக்கில், மாணவர்கள் பல மாதங்களாக இரவு -பகலாகப் படிக்கும் சூழ்நிலை இருந்து வந்தது. ஆனாலும், மாணவர்கள் சிலர் தோல்வி அடைந்து வரும் அவலம் நீடித்து வருகிறது. இதனால், மாணவர்கள் மனச் சோர்வு அடைவதாக பெற்றோர்கள் மத்தியில் புகார் எழுந்தது.
இதனைத்தடுக்கும் வகையிலும், மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டும், 11 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதனை நடைமுறைப்படுத்தும் முயற்சியிலும் தீவிரம் காட்டி வருகிறது.
அதன்படி, மாணவர் ஒருவர், ஒரு தேர்வில், குறைவான மதிப்பெண் பெற்றாலும், அடுத்து வரும் தேர்தவில் கூடுதல் மதிப்பெண் பெற முடியும். மேலும், மாணவர்கள் கட்டாயம் இரண்டு மொழிகளைப் பயில வேண்டும் என்றும், அதில் ஒரு மொழி, இந்திய மொழியாக இருக்க வேண்டும் என்றும், மற்றபடி மாணவர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில், பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்கள் பாடங்களை மனப்பாடம் செய்து, தேர்வு எழுதுவதைத் தவிர்க்கும் பொருட்டு, புரிதலுக்கு உரிய மதிப்பெண் அளிக்கும் வகையில், புதிய கல்விக் கொள்கையில் பாட திட்டங்கள் இடம் பெற்றுள்ளன. இதனையொட்டி, புதிய பாட திட்ட புத்தங்கள் அச்சிடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இப்படி, மாணவர்களுக்கு நல்ல விஷயங்கள் இடம் பெற்றுள்ளதால், புதிய கல்விக் கொள்கைக்கு மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. அதேபோல, மாணவர்களின் பெற்றோர்களும் இந்தத் திட்டத்தை இருகரம் கூப்பி வரவேற்பு கொடுக்கின்றனர் என்பதும் பிரதமர் நரேந்தர மோடிக்கு நன்றி தெரிவிக்கின்றனர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.