சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டிருப்பதின் மூலம் நாம் நிலவை வென்று விட்டோம். இதற்காக நாட்டு மக்களுக்கு நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாரதப் பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
நிலவின் வடதுருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் விண்கலத்தை அனுப்பிய நிலையில், வித்தியாசமாக தென் துருவத்தை ஆராய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை அனுப்பியது இந்தியா. கடந்த மாதம் 14-ம் தேதி தனது பயணத்தைத் தொடங்கிய சந்திரயான்-3, திட்டமிட்டபடி இன்று மாலை 6.04 மணியளவில் சாப்ஃட் லேண்டிங் முறையில் வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்துக்கு வெற்றிகரமாக விண்கலத்தை அனுப்பிய பெருமைக்கு இந்தியா சொந்தமானது. அதோடு, புதிய வரலாறும் படைத்தது.
பாரதப் பிரதமர் மோடி, பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்கா சென்றிருந்தாலும், சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்குவதைக் காணொலி வாயிலாகக் காண்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதன்படி, இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் காணொலி வாயிலாக தரையிறங்குவதை பார்த்துக் கொண்டிருந்தார் பிரதமர் மோடி. சந்திரயான்-3 கிடை மட்டத்தில் இருந்து செங்குத்தாக திரும்புவது முதல் மெதுவாக தரையிறங்குவது வரை கவனித்துக் கொண்டிருந்த பிரதமர் மோடி, ஒவ்வொரு அசைவுகளுக்கும் ஏற்ப தனது முகபாவணையில் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.
திட்டமிட்டபடி, சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியதும், கைதட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரதமர், தயாராக வைத்திருந்த தேசியக்கொடியை எடுத்து அசைத்துக் காண்பித்து தனது எல்லையில்லா மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தொடர்ந்து காணொளி வாயிலாக உரை நிகழ்த்திய பிரதமர், “இந்தியா புதிய வரலாறு படைத்திருக்கிறது. நிலவின் தென் துருவத்தை அடைந்ததின் மூலம் யாரும் அடைய முடியாத சாதனையை அடைந்திருக்கிறோம். வெற்றிக்கு உழைத்த அனைத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் எனது கோடானகோடி நன்றி. சந்திரயான்-3 வெற்றிக்காக நாட்டு மக்களுக்கும் வாழ்த்துகள்.
இந்தியா தற்போது நிலவில் உள்ளது. நிலா நிலா ஓடிவா என்கிற பாடலை இஸ்ரோ விஞ்ஞானிகல் மெய்ப்பித்திருக்கிறார்கள். இஸ்ரோ மாபெரும் சாதனையை படைத்திருக்கிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க மகத்தானம் தருணம் இது. இந்தியர்களின் வாழ்த்து ஓங்கி ஒலிக்கும். இது 140 கோடி இந்தியர்களின் இதயங்களின் மனவலிமைக்கான தருணம். இந்த வெற்றி இந்தியாவுக்கு மட்டும் சொந்தமானதல்ல, ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் சொந்தமானது. அடுத்த திட்டம் நிலவுக்கு மனிதனை அனுப்புவதுதான்” என்று பிரதமர் கூறியிருக்கிறார்.