செந்தில் பாலாஜி வீட்டுக்குச் சோதனைக்குச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளைத் தாக்கிய வழக்கில், கரூர் தி.மு.க. பிரமுகர்களின் ஜாமீன் மனுக்களைச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது.
தமிழக தி.மு.க. அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர், சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இதன் காரணமாக, தற்போது இலாகா இல்லா தி.மு.க. அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி, கடந்த 2011-2016 அ.தி.மு.க. ஆட்சியின்போது, போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, அத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, அவரும், அவரது தம்பி அசோக் குமார், உதவியாளர் சண்முகம் ஆகியோர் ஏராளமானோரிடம் பணம் வசூல் செய்து மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இது தொடர்பாக,புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே, இந்த விவகாரத்தில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக, செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் குமார் மற்றும் இவர்களது உறவினர்கள், நண்பர்கள் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்துவதற்காக, வருமான வரித்துறை அதிகாரிகள் கரூர் சென்றனர். அப்போது, செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களும், உள்ளூர் தி.மு.க.வினரும் சேர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகளைச் சோதனை நடத்த விடாமல் தடுத்துத் தாக்கியதோடு, அவர்களது வாகனத்தின் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினர்.
இதில் காயமடைந்த வருமான வரித்துறை அதிகாரிகள், கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து கரூர் காவல்துறையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில், செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களான தி.மு.க.வைச் சேர்ந்த 15 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் 15 பேருக்கும் கரூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமீனை ரத்து செய்யக் கோரி, வருமான வரித்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, மேற்கண்ட 15 பேரின் ஜாமீனையும் ரத்து செய்த நீதிமன்றம், அவர்களை நீதிமன்றத்தில் சரணடையும்படி உத்தரவிட்டது. அதன்படி, 15 பேரும் கரூர் நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் கோரினார்கள். ஆனால், ஜாமீன் நிராகரிக்கப்பட்டதால், 15 பேரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, 15 பேரும் ஜாமீன் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பலமுறை மனுத் தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதி தனபால், தி.மு.க.வினரின் மனுக்களை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.