2017 ஆம் ஆண்டு, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியதன் மூலம் குறைந்த விலை வெளியீட்டு தொழில்நுட்பத்தில் இந்தியா தன் ஆதிக்கத்தை நிறுவியது.
இந்த நிகழ்வு பிஎஸ்எல்வி என்ற இஸ்ரோவின் செயற்கைக்கோள் ஏவுவாகனத்தின் முப்பத்தெட்டாவது தொடர்ச்சியான வெற்றிப் பணியாக அமைந்தது.
இந்த பிஎஸ்எல்வி செயற்கைகோள் மூலம் வெளிநாட்டு வாடிக்கையாளர்களிடம் இருந்து அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்களின் எண்ணிக்கை மட்டும் 180 க்கும் மேலாக இருக்கும் . .
ஜூலை 30, 2023 நிலவரப்படி, பிஎஸ்எல்வி 58 ஏவுதல்களைச் செய்துள்ளது. இவற்றில் 55 அவற்றின் திட்டமிட்ட சுற்றுப்பாதையை வெற்றிகரமாக அடைந்தது. 94% வெற்றி விகிதத்தை கொண்டு உலகநாடுகளின் செயற்கைகோள்களை ஏவும் தொழில்நுட்பத்தில் இந்தியா ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளது,
இந்நிலையில் (PSLV) உடன் ஒப்பிடும்போது சிறிய செயற்கைக்கோள்களை வணிக ரீதியாக குறைந்தவிலையில் செலுத்தும் நோக்கத்துடன் SSLV உருவாக்கப்பட்டது.
SSLV ஆனது 500 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை குறைந்த புவி சுற்றுவட்டப் பாதைக்கு “Launch -on demand” அடிப்படையில் அனுப்பக்கூடியது. அடுத்தப் பத்தாண்டுக்குள் இந்தச் சந்தையில் இந்தியா தன் பங்கை 5 மடங்காக உயர்த்த திட்டமிட்டுள்ளது.
இதன் அடிப்படையில் சிறிய செயற்கைக்கோள்களை ஏவுவதற்குப் பயன்படுத்தப்படும் ஏவுகணை தயாரிப்பைத் தனியார்மயமாக்கும் திட்டத்தை இந்திய அரசு அறிமுகப்படுத்தியது. சுமார் 20 நிறுவனங்கள் தனியார்மயமாக்கலுக்கான ஏலத்தில் விருப்பம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், L & T, மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனங்கள், சிறிய வகை செயற்கைக்கோள்களை ஏவும் ராக்கெட் தயாரிப்பில் ஈடுபட முன்வந்துள்ளன.
சந்திரயான் -3 இன் வெற்றியானது விண்வெளி முயற்சிகளில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் இந்தியாவின் முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரோவுக்குத் தொடர்புடைய நிறுவனங்களின் பங்குகளின் விலை இந்த வாரம் ஏற்றமடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் நரேந்திர மோடியின் முன்மொழிவை ஏற்று பெரிய நிறுவனங்கள் மட்டும் அன்றி நூற்றுக்கணக்கான இந்திய தொழில்முனைவோர், space start up நிறுவனங்கள் உலகளாவிய விண்வெளி சந்தையில் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு பங்களிக்கத் தொடங்கும் போது, பில்லியன் டாலர் செயற்கைக்கோள் ஏவும் சந்தையில் உண்மையிலேயே இந்தியா ஆதிக்கம் செலுத்த முடியும் என்ற நம்பிக்கை பிறக்கும்.