சனாதன தர்மத்தை துஷ்பிரயோகம் செய்தால் இதுதான் நிலை என்று காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடி இருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத், மகத்தான வெற்றியைப் பெற்ற பா.ஜ.க.வுக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்திருக்கிறார்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 7, 17, 25, 30 ஆகிய தேதிகளில் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றன. இதையடுத்து, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது.
மிசோராம் மாநிலத்தில் மட்டும் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இந்த சூழலில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பா.ஜ.க. முன்னிலை வகித்து வருகிறது. ஆகவே, மேற்கண்ட 3 மாநிலங்களிலும் பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றுவது உறுதியாகி இருக்கிறது. அதேசமயம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியை இழந்திருக்கிறது.
இந்த நிலையில், சனாதன தர்மத்தை அவதூறாகப் பேசினால் இதுதான் நிலை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத், காங்கிரஸ் கட்சியை கடுமையாகத் தாக்கி இருக்கிறார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெங்கடேஷ் பிரசாத் வெளியிட்டிருக்கும் பதிவில், “சனாதன தர்மத்தை துஷ்பிரயோகம் செய்தால், அது அதன் விளைவுகளை ஏற்படுத்தும்.
மேலும், மகத்தான வெற்றியைப் பெற்ற பா.ஜ.க.வுக்கு வாழ்த்துகள். இது பிரதமர் நரேந்திர மோடியின் அற்புதமான தலைமையும், அமித்ஷா மற்றும் அடிமட்டத்தில் கட்சி கேடரின் சிறப்பான பணிக்கும் கிடைத்த மற்றொரு சாட்சி” என்று தெரிவித்திருக்கிறார்.