5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அரசின் திட்டங்களின் மேல் பொதுமக்களுக்கு நம்பிக்கை உள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ராவின் பயனாளிகளிடம் நேற்று காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
அப்போது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசின் திட்டங்களின் பலன்களை வழங்குவதே தனது அரசின் முதன்மையான பணியாகும் என்றார். ஒவ்வொரு பெண்ணும், விவசாயிகளும், இளைஞர்களும், ஏழை மக்களும் தனக்கு விஐபிகள் என்றும், அவர்களின் மேம்பாட்டிற்காக தனது அரசு உறுதிபூண்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.
இதுவரை அரசின் திட்டங்களின் பலன்களைப் பெறாதவர்களுக்கு சேவைகளை வழங்கும் சக்திவாய்ந்த ஊடகமாக விகாசித் பாரத் சங்கல்ப் யாத்ரா மாறியுள்ளதாக பிரதமர் கூறினார். ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில், நாட்டின் 40 ஆயிரம் பஞ்சாயத்துகள் மற்றும் பல நகரங்களில் உள்ள ஒரு கோடியே 25 லட்சத்துக்கும் அதிகமான மக்களை இந்த யாத்திரை சென்றடைந்துள்ளது என மோடி தெரிவித்தார்.
இந்த யாத்திரையில் மக்கள் ஆர்வத்துடன் இருப்பதாகவும், யாத்திரை வாகனத்தை மோடியின் உத்தரவாத வாகனம் (மோடி கி கேரண்டி வாலி காடி) என்றும் அவர் கூறினார். இந்த வாகனங்களை மக்கள் ஆர்வத்துடன் காத்திருந்து வரவேற்பதாக மோடி தெரிவித்தார்.
மோடி கி கியாரண்டி வாலி காடிக்கு அமோக வரவேற்பு கிடைத்ததாகவும், இதற்காக பல இடங்களில் கிராம பஞ்சாயத்துகள் மூலம் வரவேற்புக் குழுக்கள் அமைக்கப்பட்டதாகவும் மோடி குறிப்பிட்டார்.
இந்த வாகனங்கள் மூலம், அந்தமான் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போன்ற நாட்டின் தொலைதூரப் பகுதிகளிலும் அரசு சேவைகளின் பலன்கள் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
குறுகிய காலத்தில் சுமார் ஒரு லட்சம் புதிய உஜ்வலா இணைப்புகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும், மேலும் 35 லட்சத்துக்கும் அதிகமான ஆயுஷ்மான் ஹெல்த் கார்டுகள் இந்த பிரச்சாரத்தின் போது விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நமோ திதி பிரச்சாரத்தின் கீழ் விரைவில் பெண்களுக்கு ஆளில்லா விமானங்களை இயக்கும் பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
‘ட்ரோன் திதி யோஜனா’ திட்டத்தின் கீழ், 2024-25 முதல் 2025-2026 வரையிலான காலகட்டத்தில், விவசாய நோக்கத்திற்காக விவசாயிகளுக்கு வாடகை சேவைகளை வழங்குவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 15 ஆயிரம் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ட்ரோன்கள் வழங்கப்படும் என்றும் மோடி குறிப்பிட்டார்.
பிரதமர் தனது உரைக்கு முன், கர்நாடகா, சண்டிகர், ஜம்மு காஷ்மீர், பீகார் மற்றும் குஜராத் மாநிலங்களில் உள்ள அரசு திட்டங்களின் பயனாளிகளுடன் உரையாடினார். அப்போது, பயனாளிகள் இந்த யாத்திரை தங்களுக்கு எவ்வாறு உதவியது என்பது குறித்து தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.