காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. தீரஜ் சாஹூவுக்கு எதிராக பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் அக்கட்சியின் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் மாநிலங்களவை எம்.பி.யாக இருப்பவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தீரஜ் சாஹூ. இவர், ஒடிஸா, ஜார்க்கண்ட், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் மதுபான தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவரது நிறுவனம் வரி ஏய்ப்பு செய்வதாகப் புகார் எழுந்தது.
இதையடுத்து, இவருக்குச் சொந்தமாக மேற்கண்ட 3 மாநிலங்களிலும் உள்ள அலுவலகங்கள் மற்றும் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை நடைபெற்ற சோதனையில், 300 கோடி ரூபாய்க்கும் மேல் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த பணம் எண்ணப்பட்டு வருகிறது. அதேநேரம், வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனையும் தொடர்ந்து நடந்து வருகிறது. வருமான வரித்துறை சோதனையில் இவ்வளவு பெரிய தொகை இதுவரை சிக்கியதில்லை. இதுதான் முதல்முறை என்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பாரத் ஜோடை யாத்திரை சென்றபோது, அவருடன் தீரஜ் சாஹூவும் சென்றார். அதோடு, பண மதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பாக கடந்த ஆண்டு தீரஜ் சாஹூ, கருப்புப் பணம் குறித்து வெளியிட்ட பதிவும் வைரலானது.
இந்த நிலையில், தீரஜ் சாஹூவுக்கு எதிராக பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா தலைமையில் அக்கட்சியின் எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர். காங்கிரஸுக்கு எதிராக பாதாகைகளை ஏந்தி கோஷமிட்டு பேரணியாக சென்றதால் நாடாளுமன்ற வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.