வெள்ள நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசு இதுவரை 950 கோடி ரூபாய் வரை கொடுத்துள்ளது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் பொன்விழா நகரில் மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகனின் முகாம் அலுவலகம் திறக்கப்பட்டது. அலுவலகத்தை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி ஊழல் மிகுந்த கூட்டணி. காங்கிரஸ் எம்பி ஒருவரது வீட்டில் 300 கோடி ரூபாய் அளவு ஊழல் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல, ஆம் ஆத்மி கட்சி, மம்தா பானார்ஜியின் திரிணாமுள் கட்சியினரிடம் இருந்தும் ஊழல் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, சென்னை மேயராக இருந்த மு.க.ஸ்டாலின், சென்னையை சிங்காரச் சென்னை ஆக்குவோம் என்றார். ஆனால், சென்னை ஒரு மழைக்கே தாங்காமல் தண்ணீரில் தத்தளிக்கிறது. மழைநீர் வடிகால் பணியை ரூ. 4,000 கோடியில் செலவு செய்துள்ளதாக கூறுகிறார்கள். பின்னர், 1,800 கோடி என்கிறார்கள்.
வெள்ள நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசு இதுவரை 950 கோடி ரூபாய் வரை கொடுத்துள்ளது. மத்தியக்குழு ஆய்வுக்கு பின்னர் உரிய நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றார்.