புதுச்சேரி மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் இன்று அறிமுகம் செய்யப்படவிருக்கிறது.
மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா, 1996-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் தேவகவுடா தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இந்த மசோதா தோல்வியடைந்தது.
இதன் பிறகு, 1998-ல் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசிலும், தொடர்ந்து 1999, 2002, 2003 என பல்வேறு கட்டங்களிலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், ஒவ்வொரு முறையும் இம்மசோதா தோல்வியடைந்தது.
இதையடுத்து, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு மீண்டும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைக் கொண்டுவர முடிவு செய்தது. அதன்படி, இம்மசோதா கடந்த செப்டம்பர் மாதம் நடந்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது.
எனினும், மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, தொகுதி மறுவரையறை செய்த பின்னரே இச்சட்டம் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆகவே, 2029 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக மகளிர் இடஒதுக்கீடு சட்டம் நடைமுறைக்கு வருவது சாத்தியமில்லை என்று கூறப்பட்டது.
இந்த நிலையில்தான், முதல்கட்டமாக புதுச்சேரி மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய 2 யூனியன் பிரதேசங்களிலும் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த, மத்திய பா.ஜ.க. அரசு முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஆகவே, இது தொடர்பான 2 மசோதாக்களை இன்று நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.