மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராக மூன்று முறை பதவி வகித்த சீதாராம் யெச்சூரி காலமான நிலையில் அவர் கடந்து வந்த பாதையை தற்போது பார்க்கலாம்.
1952 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த சீதாராம் யெச்சூரி பத்தாம் வகுப்பு வரை ஐதராபாத்தில் படித்தார்.
டெல்லியில் உள்ள பிரசிடெண்ட்ஸ் எஸ்டேட் பள்ளியில் 12 ஆம் வகுப்பில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்தார்.
டெல்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பி.ஏ படிப்பை முடித்த யெச்சூரி ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றார்.
அதே ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பி.எச்.டி ஆராய்ச்சி படித்துக் கொண்டிருந்த சீதாராம் யெச்சூரி எமர்ஜென்சி காலத்தில் கைது செய்யப்பட்டதால் அவரின் படிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது.
1970 களில் ஜே.என்.யு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவராக மூன்று முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார். 1974 ஆம் ஆண்டு இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்த சீதாராம் யெச்சூரி அதற்கு அடுத்த ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.
1978ல் இந்திய மாணவர் சங்கத்தின் இணைச் செயலாளராகவும் சீத்தாராம் யெச்சூரி பணியாற்றியுள்ளார் . 1986ல் மாணவர் சங்கத்தில் இருந்து விலகிய சீத்தாராம் யெச்சூரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் வகித்துள்ளார்.
மேங்குவங்கத்திலிருந்து 2005 ஆம் ஆண்டு ராஜ்யசபா உறுப்பினராக தேர்வான சீதாராம் யெச்சூரி 2017 வரை அப்பதவியை வகித்துள்ளார். இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் கட்டுரையாளராகவும் பல்வேறு கட்டூரைகளை எழுதியுள்ளார். அரசியல்வாதி, பொருளாதார நிபுணர், எழுத்தாளர் என பன்முகத் திறமை கொண்டவர் சீதாராம் யெச்சூரி
2015 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சீதாராம் யெச்சூரி தொடர்ந்து மூன்று முறை தேர்வு செய்யப்பட்டவர் ஆவார்.