இந்தியாவில் விற்பனை சரிவு, அதிகரித்து வரும் போட்டி போன்ற காரணங்களால் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய சாம்சங் முடிவு செய்துள்ளது. இந்நிலையில், சென்னை சாம்சங் தொழிலாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
உலகளவில், மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் புகழ்பெற்று விளங்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக சாம்சங் விளங்குகிறது. தென் கொரிய நிறுவனமான சாம்சங் Memory Chips, Smart Phones, AC, FRIDGE, WASHING MACHINE உள்ளிட்ட மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்துகிறது.
சாம்சங் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக தொழிற்சங்கம் என்ற ஒன்றே இல்லை. தொழிற்சங்கம் உருவாகாமல் தடுக்கும் பொருட்டு தொழிலாளர்களை கண்காணிப்பு வளையத்திற்குள் வைத்திருந்தது சாம்சங் நிறுவனம். தொழிற்சங்கம் உருவானாலும் அதனை உடைக்கும் சதி வேலையிலும் நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டது. இதற்கெனவே “ஏஞ்சல் ஏஜெண்டு” என்ற பெயரில் கங்காணிகளை நியமித்திருக்கிறது சாம்சங் நிறுவனம்.
தொழிலாளர்களின் தொடர் முன்னெடுப்பால் 2010-களின் பிற்பகுதியில் சாம்சங்கில் தொழிற்சங்கம் உருவானது. இப்பொழுது சாம்சங் மின்னணுவியல் தேசிய தொழிற்சங்கம் (National Samsung Electronics Union) உருவாகி அதில் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இது சாம்சங் நிறுவனத்தின் மொத்த ஊழியர் எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பங்குக்கும் அதிகமாகும்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஜனவரி மாதம் முதல் தொழிற்சங்கம், தங்களது கோரிக்கைகளை முன்வைத்து நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. ஆனால், தொழிலாளர்களின் கோரிக்கைக்கு நிர்வாகம் செவிசாய்க்கவில்லை.
இதன் விளைவாக கடந்த ஜூலையில் 3 நாட்கள் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்தத்தால் சாம்சங் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்றும், போராட்டத்தால் சாம்சங் மேலும் நஷ்டத்தைச் சந்திக்கும் என்று கணிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் உள்ள சாம்சங் தொழில்சாலை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவில் உத்திரபிரதேசத்திலும் தமிழகத்திலும் இரண்டு சாம்சங் தொழிற்சாலைகள் உள்ளன. இந்தியாவில் சாம்சங்கின் சுமார் 1,00,772 கோடி ரூபாய் வருவாயில் 30 சதவீதம் தமிழக சாம்சங் தொழில்சாலையின் பங்கு என்பது குறிப்பிடத் தக்கது.
கடந்த சில ஆண்டுகளாகவே ,பன்னாட்டு நிறுவனங்களில் தொழிலாளர்கள் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன.
உதாரணமாக, ஹரியானாவில் ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியாவின் ஊழியர்கள் போராட்டம், தமிழகத்தில் Foxconn நிறுவனத்துக்கு எதிரான போராட்டம், மகாராஷ்டிராவில் ஹூண்டாய்க்கு எதிரான தொழிலாளர்கள் போராட்டம், ரெனால்ட்-நிசான், ஹூண்டாய் மற்றும் ஃபோர்டு மோட்டார் கோ உள்ளிட்ட நிறுவனங்களில் ஊழியர்கள் போராட்டம், கர்நாடகாவில் ஆப்பிள், விஸ்ட்ரான் மற்றும் டொயோட்டா மோட்டார் ஊழியர்கள் போராட்டம் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம், வங்கதேச ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள் போராட்டம், அமேசான் தொழிலாளர்கள் போராட்டம், ஜெர்மனி விவசாயிகள் போராட்டம் என அடுத்தடுத்து கார்ப்பரேட் நிறுவனங்களின் சுரண்டலுக்கு எதிராக நடைபெறும் உழைக்கும் வர்க்கத்தின் போராட்டங்கள் கார்ப்பரேட் முதலாளித்துவ நிறுவனங்களைப் பீதியடைய வைத்திருக்கிறது.
இந்நிலையில், இந்தியக் குழுவை தென் கொரியாவிற்கு வரவழைத்து, தற்போதைய பிரச்சினைகள் மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகள் பற்றி சாம்சங் நிர்வாகம் விவாதித்து வருகிறது.
சாம்சங்கின் போராட்டங்கள், Xiaomi மற்றும் Vivo போன்ற பிராண்டுகளின் அபரிதமான சந்தை போட்டி, ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்களுடனான ஏற்பட்ட மோதல்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் விலகல் ஆகியவற்றால் சாம்சங் நிறுவனம் கடும் நெருக்கடியில் உள்ளது என்று தெரிய வருகிறது.
இதற்கிடையே, சாம்சங் நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு ஆட்கள் எடுப்பதை நிறுத்திவிட்டதாகவும், ஏற்கெனவே தாமாகவே பணி விலகிய பதவிகளை நிரப்பாமல் வைத்திருப்பதாகவும், ஆஃப்-ரோல் ஊழியர் எண்ணிக்கையைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.