பிவிஆர் ஐநாக்ஸ் போன்ற மல்டி பிளக்ஸ் திரையரங்குகள், தென்னிந்தியப் படங்களை வட மாநிலங்களில் திரையிடத் தயங்கி வரும் நிலையில், சமீபத்தில் வெளியான தமிழ் திரைப்படங்கள், ஹிந்தி ரசிகர்களை கவர்ந்துள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
தென்னிந்திய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியிடப்பட்ட நான்கு வாரங்களுக்குள் OTT தளத்தில் வெளியாகின்றன. திரையரங்குகளில் வெளியாகி குறைந்தது எட்டு வாரங்கள் கழித்து தான் OTT தளத்தில் வெளியாகவேண்டும் என்று PVR, ஐனாக்ஸ் போன்ற மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சொல்லி வந்தனர்.
கடந்த ஜனவரியில், நெட்ஃப்ளிக்ஸ் தனது OTT தளத்தில் வெளியாகும் அனைத்து படங்களின் பட்டியலையும் வெளியிட்டிருந்தது. அதில் கமல்ஹாசனின் இந்தியன் 2, விக்ரமின் ‘தங்கலான்’, அஜித்தின் ‘விடாமுயற்சி’, சிவகார்த்திகேயனின் ‘எஸ்கே21’, கீர்த்தி சுரேஷின் ‘ரிவால்வர் ரீடா’ மற்றும் ‘கண்ணிவெடி’, விஜய் சேதுபதியின் ‘மஹாராஜா’, ஆர்.ஜே.பாலாஜியின் ‘சொர்க்கவாசல்’ , சதீஷின் ‘காஞ்சூரிங் கண்ணப்பன்’ ஆகிய தமிழ் படங்கள் இடம் பெற்றிருந்தன.
அதனாலேயே PVR, ஐனாக்ஸ் போன்ற மல்டிபிளக்ஸ் திரையரங்குகள், வட மாநிலங்களில் தங்கள் திரையங்குகளில் அவற்றைத் திரையிடுவதில்லை என முடிவு செய்தன. இருந்தபோதிலும், மற்ற சிறிய மல்டிபிளக்ஸ்கள் மற்றும் தனி திரையரங்குகள் தமிழ் திரைப் படத்தை வெளியிட்டு லாபம் சம்பாதித்து வருகின்றன.
சமீப காலமாக, இந்தி பேசும் மாநிலங்களில் திரைக்கு வரும் படங்களில் உள்ளடக்க வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தங்கலான் மற்றும் டிமான்டே காலனி 2 போன்ற சிறிய அளவிலான தமிழ் படங்கள் அந்த வெற்றிடத்தை நிரப்ப அடியெடுத்து வைத்து வெற்றியும் பெற்றுள்ளன.
இத்தகைய சிறிய பட்ஜெட் தமிழ் படங்களில் RRR மற்றும் KGF போன்ற பிரம்மாண்டம் இல்லையென்றாலும், இந்தி ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, இந்தியிலும் திரையிடப்பட்ட விஜய் சேதுபதியின் மஹாராஜா திரைப்படம் 80 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகி உள்ளது.
இந்த மாதிரியான திரைப்படங்கள் அந்தந்த மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், தாமதமாக வெளியானால் கூட நல்ல லாபத்தைத் தருகின்றன என்று வட மாநில திரையரங்க உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்தப் படங்களுக்கான பார்வையாளர்களில் பெரும்பாலும் வட மாநிலங்களில் வசிக்கும் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்களே அதிகம் என்கிறார்கள்.
பெரிய திரைப்படங்கள் எதுவும் வெளியாகாத காலத்தில், திரையரங்குகளின் ஊழியர்களின் சம்பளம், மின்சாரம் மற்றும் பராமரிப்புக் கட்டணங்கள் ஆகியவற்றை சமாளிக்க திரையரங்க உரிமையாளர்கள் தடுமாறுகின்றனர்.
இந்நிலையில், வட மாநிலங்களில் உள்ள திரையரங்குகளின் நிலையை சமீபத்தில் வெளியான தமிழ் படங்கள் மாற்றியுள்ளது என்பது பெருமைக்குரிய விஷயமே.