இந்தியாவில் சிறுபான்மையினர் குறித்து ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கொமேனி கூறிய கருத்துகளுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிந்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இஸ்லாமிய இறைதூதராக சொல்லப்படும் முகமது நபிகள் நாயகத்தின் பிறந்த நாளையொட்டி , ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கொமேனி, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், ‘மியான்மர், காசா, இந்தியா ஆகிய நாடுகளில் ஒரு இஸ்லாமியர் அனுபவிக்கும் துன்பங்களை மறந்துவிட முடியாது’ என்றும், கவனிக்காமல் இருப்பவர், இஸ்லாமியராக இருக்க முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.
ஈரானின் உச்ச தலைவரின் கருத்துக்கு உடனடியாக, இந்திய வெளியுறவு அமைச்சகம், கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் சிறுபான்மையினர் குறித்து ஈரானின் உச்ச தலைவரின் கருத்துகளைக் கடுமையாக கண்டித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், அவை தவறான தகவல் என்றும், அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாதவை,” என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், சிறுபான்மையினரைப் பற்றி கருத்து தெரிவிக்கும் நாடுகள் மற்றவர்களைப் பற்றி சொல்வதற்கு முன் தங்கள் சொந்த நாட்டில் நடப்பதை மறந்து விடக் கூடாது என்றும் ஈரானின் உச்ச தலைவருக்கு அறிவுறுத்தி இருக்கிறது.
இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் பற்றி ஈரானின் உச்ச தலைவர் கருத்து தெரிவிப்பது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடியின் அரசு, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து தந்த 370 வது சட்டப் பிரிவை ரத்து செய்தபோதும், அயத்துல்லா அலி கொமேனி கவலை தெரிவித்திருந்தார். மேலும் 2020ம் ஆண்டு குடியுரிமை சட்டத் திருத்தம் கொண்டு வந்ததைத் தொடர்ந்து, தலைநகர் டெல்லியில் நடந்தபோது, கலவரத்தின் பின்னணியில் தீவிரவாத இந்துக்கள் இருப்பதாகவும், இந்திய இஸ்லாமியர்களின் படுகொலையை நிறுத்தவேண்டும் என்றும் கருத்து கூறியிருந்தார்.
இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வர்த்தக உறவு உள்ளது.
2022- 2023 ஆம் நிதியாண்டில், ஈரானுடனான இந்தியாவின் இருதரப்பு வர்த்தகம் 2.33 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு சரக்குகளைக் கொண்டு செல்வதற்கு, பாகிஸ்தானில் உள்ள கராச்சி மற்றும் குவாதார் துறைமுகங்களைத் தவிர்த்து, ஓமன் வளைகுடாவில் ஈரானின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள சபகர் துறைமுகத்தை இந்தியா மேம்படுத்தி வருகிறது.
இதற்காக,தனது நாட்டின் முக்கிய துறைமுகமான சபகர் துறைமுகத்தை நிர்வகிக்கவும்,மேம்படுத்தவும் 10 ஆண்டுகால ஒப்பந்தத்தில் ஈரான் இந்தியாவுடன் கையெழுத்திட்டுள்ளது.
இந்தியாவுடன் பொதுவாக நல்லுறவு பேணுவதையே விரும்பும் ஈரான், இப்போது இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்திருப்பது தேவையற்றது என்று சர்வதேச அளவில் பார்க்கப்படுகிறது.
ஈரானில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஹிஜாப்புக்கு எதிரான போராட்டத்தில் முன்னின்ற அமினி கொல்லப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டன. அமினியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில், ஆயிரக்கணக்கான ஈரான் பெண்கள் தலைநகர் தெஹ்ரானின் வீதிகளில் பேரணி நடத்தினர.
மேலும், டெஹ்ரானில் உள்ள எவின் சிறையில் அடைக்கப்பட்டுள் பெண்கள் அமினியின் நினைவாக உண்ணாவிரதப் போராட்டத்தையும் மேற்கொண்டனர். உள்நாட்டில் இது போன்று பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு வரும் ஈரான், மற்றொரு நாட்டில் உள்ள மக்களை பற்றி கருத்து தெரிவிப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.