பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்தநாளையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பாஜகவினர் இனிப்புகள் வழங்கியும், நலத்திட்ட உதவிகள் செய்தும் கொண்டாடினர்.
கன்னியாகுமரி மாவட்டம் ஊட்டுவாழ்மடம் பகுதியில் செயல்பட்டுவரும் தேஜஸ்வி பெண்கள் காப்பகத்தில், பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி பொருளாளர் முத்துராமன் தலைமையில் காலை உணவு வழங்கப்பட்டது. இதில், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உணவை வழங்கினார். இந்நிகழ்வில் பாஜக மாவட்ட துணைத் தலைவர் தேவ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
கோவில்பட்டியில் மரகன்றுகள் நட்டும், இரத்ததானம் செய்தும் பிரதமர் மோடியின் பிறந்தநாளை பாஜகவினர் கொண்டாடினர். வடக்கு மாவட்ட பாஜக சார்பில் 100க்கும் மேற்பட்டோர் அரசு தலைமை மருத்துவமனையில் ரத்ததானம் செய்தனர். மேலும், கதிரேசன் மலை முருகன் கோயிலில், பிரதமருக்கு பூரண ஆயுளும், உடல் நலமும் வேண்டி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
தென்காசியில் பிரதமர் மோடியின் 74வது பிறந்தநாளையொட்டி, மாவட்ட பாஜக சார்பில் காசிவிஸ்வநாதர் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள், மரக்கன்றுகள் மற்றும் துணிப்பைகள் வழங்கப்பட்டன. பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டு அவற்றை வழங்கினர்.