கொல்கத்தாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என உச்சநீதிமன்றத்தில் மேற்கு வங்க அரசு உறுதியளித்தது.
கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என அரசின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினார்.
தொடர்ந்து மருத்துவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மருத்துவமனையில் பாதுகாப்பு அம்சங்களை உறுதிப்படுத்தினால், மருத்துவர்கள் பணிக்குத் திரும்புவதில் எந்தப் பிரச்னையும் இல்லை என வாதிட்டார்.
அப்போது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா குறுக்கிட்டு, பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரின் பெயரும் புகைப்படமும் விக்கிபீடியாவில் சர்வசாதாரணமாக வலம்வருவதாக வேதனை தெரிவித்தார். இதை தீவிரமாக கருதிய நீதிபதிகள், உடனடியாக அவரது பெயரையும் புகைப்படத்தையும் நீக்குமாறு விக்கிபீடியாவுக்கு உத்தரவிட்டனர்.
வழக்கின் நிலவர அறிக்கையை தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.