சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில், பயணிகள் விமானங்கள் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விமானப்படை தினத்தையொட்டி சென்னை கடற்கரையில் வரும் 6ம் தேதி விமானப்படை வான்வழி சாகச நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. காலை 11 மணியளவில் தொடங்கும் இந்நிகழ்ச்சியில் அனைத்து வகை போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் வான்சாகச குழுக்கள் பங்கேற்கின்றன.
இதற்கான ஒத்திகை 4ம் தேதி வரை நடைபெறும் நிலையில், 6ம் தேதி நடைபெறும் விமான சாகச நிகழ்ச்சியை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின், ராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பார்வையிடுகின்றனர்.
இந்த சாகச நிகழ்ச்சியை முன்னிட்டு மெரினா கடற்கரை பகுதியில் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்நிகழ்ச்சியை பொதுமக்கள் பார்வையிடுவத்றாக கூடாரங்களும், பார்க்கிங் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிகழ்வை முன்னிட்டு வரும் 6-ம் தேதி வரை பயணிகள் விமான சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சுமார் 2 மணி நேரம் வரை பயணிகள் விமானம் தாமதமாக புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அக்டோபர் 8ம் தேதி வரை சென்னைக்கு வரும் சர்வதேச விமானங்களின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்று நடைபெறும் ஒத்திகை நிகழ்வை ஒட்டி சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.