சென்னை வேளச்சேரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர் சாலைப் பள்ளத்தில் தடுமாறி கீழே விழுந்த நிலையில், அந்த வழியாக வந்த அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பலியானார்.
சென்னை வேளச்சேரியில் இருந்து கிண்டி நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்தது. அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றவர் சாலையில் இருந்த பள்ளத்தில் சிக்கிய நிலையில் கீழே விழாமல் இருக்க, பிரேக் பிடித்துள்ளார்.
ஆனால், பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதியதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, அரசு பேருந்தின் முன்பக்க சக்கரத்தில் சிக்கி அவர் பலியானார். இது தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர் பெயர் முருகேஷ் என்பது தெரிய வந்துள்ளது. மழைக் காலம் தொடங்கும் முன்பாகவே சென்னையின் முக்கிய சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்கள் உருவாகி இருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாவதுடன், விபத்திலும் சிக்குகின்றனர்.
எனவே, தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் சென்னையின் முக்கிய சாலைகளில் இருக்கும் பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.