2-ஆம் கட்ட மெட்ரோ பணிகளுக்கு ஒப்புதல் வழங்கிய பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை, நந்தனத்திலுள்ள சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தலைமையகத்தில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார், முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிய பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்.
63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 118.9 கிலோ மீட்டர் நீளத்திற்கு 3 வழித்தடங்களில் இந்த மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாவது கட்டப் பணிகளை செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார். திட்டமிடப்பட்ட காலத்திற்கு முன்பே பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.