ராமநாதபுரம் பெரிய கண்மாய் கலுங்கின் 5 ஷட்டர்களும் முறையாக பராமரிக்கப்படாததால் நீர் வீணாக வெளியேறி வருகிறது.
ராமநாதபுரம் பெரிய கண்மாய் 12 கிலோ மீட்டர் நீளமும், 200 ஏக்கர் பரப்பளவையும் கொண்டது. இந்த கண்மாயில் 618 மில்லியன் லிட்டர் கன அடி நீரை சேமிக்க முடியும்.
இந்த கண்மாய் முறையாக தூர்வாரப்படாததால் நீரை தேக்கி வைக்கும் அளவு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இந்நிலையில் கண்மாயின் தென் கலுங்கின் 5 ஷட்டர்களில் ஏற்பட்ட இடைவெளியால் நீர் வீணாக வெளியேறி வருகிறது.
வினாடிக்கு குறைந்தபட்சம் 20 முதல் 25 கன அடி நீர் வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஆகையால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மெத்தனப்போக்கை கைவிட்டு ஷட்டர்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.