பழனி முருகன் கோயில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு 3 நாட்களுக்குக் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படும் எனக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா விமர்சையாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முருகன் – வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் மற்றும் பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் நடைபெறவுள்ளது.
பங்குனி உத்திர விழாவில் கலந்து கொள்வதற்காகத் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்து வருவதால், பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்வதற்காக, இன்று முதல் 3 நாட்களுக்குக் கட்டண தரிசனம் ரத்து செய்யப்படும் எனக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், மலைக்கோயில் செல்லும் பாதை ஒரு வழிப் பாதையாக மாற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யானை பாதை வழியாக மலைக் கோயிலுக்குச் செல்லவும், படிப்பாதை வழியாகக் கீழே இறங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பழனியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.