பழனியில் புகார் அளிக்க வந்த பெண்ணின் அலைபேசிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா காவல் நிலையத்தில் சில நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் தனிப்பட்ட பிரச்னைக்காக புகார் அளிக்க வந்துள்ளார். அப்போது, அந்தப் பெண்ணின் அலைபேசி எண்ணைப் பெற்றுக் கொண்ட காவல் உதவி ஆய்வாளர் ராஜகோபால், புகாரின் மீது நடவடிக்கை எடுக்காமல் பெண்ணின் அலைபேசிக்கு ஆபாசமான முறையில் குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண், காவல் உதவி ஆய்வாளர் ராஜகோபால் மீது தகுந்த ஆதாரங்களுடன் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து, காவல் உயர் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், அலைபேசி வழியாக பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது உறுதியானது.
இதனை அடுத்து, காவல் உதவி ஆய்வாளர் ராஜகோபாலை பணியிடை நீக்கம் செய்து திண்டுக்கல் சரக டிஐஜி சசிமோகன் உத்தரவிட்டுள்ளார்.
















