காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்காக எந்த அவமானத்தையும் தாங்க தயாராக உள்ளேன் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் மேகதாது அணை தொடர்பான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவில் உள்ள அனைத்து கட்சிகளும் இணைந்து செயல்படுவதாகவும், தமிழகத்திலும் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி கொடுத்துவிட்டு அரைகுறையாக தள்ளுபடி செய்தது ஏன் எனக் கேள்வி எழுப்பிய அவர், குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய், காவிரி நமக்கு உயிர் ஆதாரம், உணர்வு ரீதியான ஒன்று எனக் குறிப்பிட்டார். காவிரி விவகாரத்தை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் துளிகூட இல்லை என தெளவுபடுத்திய அவர், அதற்கான அவசியமும் இல்லை எனத் தெரிவித்தார். மேகதாது விவகாரத்தில் அனைவரும் சேர்ந்துதான் தீர்மானம் நிறைவேற்றியதாகவும் குறிப்பிட்டார்.
காவிரிப் பிரச்னையில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கோரிக்கை வைத்தது தாம்தான் எனக் கூறிய முதலமைச்சர் ஜோசப் விஜய், பிரச்னையை தீர்க்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்துக்காகவே பெங்களூரு செல்ல முடிவெடுத்ததாகத் தெரிவித்தார்.
பகை நாடுகளே பேசி தீர்க்கும்போது பக்கத்து மாநிலத்துடன் பேசி பார்க்கலாம் என்று, தான் நினைத்ததாகவும் அவர் கூறினார். பெங்களூருவுக்குச் சென்று அவமானம் நேரிட்டால் என்னாகும் என்று அதிகாரிகள் கேட்டதாகவும், தமிழக மக்களுக்காக அவமானத்தை தாங்க தயாராக உள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
















