இந்தியா- நேபாள எல்லைப் பகுதிகளில் நடந்த மதக்கலவரங்களுக்குப் பின்னால் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ISI யின் பங்கு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த ஜூலை 26ம் தேதி நேபாளத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள Sunsari சுன்சரி மாவட்டத்தில் தேவாங்கஞ்ச் கிராமத்தில் உள்ள கப்தான்கஞ்ச் பகுதியில் மிகப்பெரிய மத கலவரம் நடந்தது.
பீகாரை ஒட்டி இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையேயான ஒரு முக்கியப் போக்குவரத்து வழித்தடமுமாக இந்த Sunsari சுன்சரி மாவட்டம் அமைந்துள்ளது.
இந்து மற்றும் முஸ்லிம் சமூகத்தினரிடையே மதச் சடங்குகள் மற்றும் ஒலிபெருக்கிகள் பயன்பாடு தொடர்பாக தொடங்கிய கலவரம் இறுதியில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் முடிந்தது. இந்த வன்முறையில் ஒருவர் மரணமடைந்தார். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்
தொடர்ந்து மேலும் பல எல்லையோர மாவட்டங்களுக்கும் வன்முறை பரவி நான்கு பேர் மதவாதத்துக்கு பலியாகியுள்ளனர்.
இந்த மதக்கலவரங்களில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ISI மறைமுகப் பங்களிப்பைச் செய்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தேசிய புலனாய்வுத் துறை அறிக்கையின்படி, மத கலவரம் நடப்பதற்கு முன் துருக்கியைச் சேர்ந்த பாகிஸ்தான் வம்சாவளியினரான முகமது இல்யாஸ் குமான் என்ற இஸ்லாமிய மதகுரு தேவாங்கஞ்சில் உள்ள ஒரு மசூதியில் பல நாட்கள் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
அவருடன் காத்மாண்டுவின் ஜாமா மசூதியின் இமாம் முஃப்தி அபு பக்கர் காஸ்மியும் தங்கி இருந்துள்ளார். இருவரும் சேர்ந்து எல்லை மாவட்டங்களின் உள்ளூர் மதகுருக்களுடன் சேர்ந்து மத கலவரத்துக்கு திட்டமிட்டிருக்கலாம் என்று புலனாய்வு அமைப்பினர் கூறுகின்றனர்.
மொகரம் பண்டிகைக்கு அங்குள்ள சிவன் திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலத்திலும், அதைச் சுற்றியும் இஸ்லாமியக் கொடிகள் ஏற்றப்பட்டதாகவும் அவ்வூர் இந்துக்கள் அவற்றை அகற்றச் சொல்லியதாகவும் புலனாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் மசூதி வழியாக சென்ற சிராவண யாத்திரையில் காவடி எடுத்துச் சென்ற பக்தர்களை மதரஸாவைச் சேர்ந்த குழுவினர் தாக்கியுள்ளனர் என்றும், கலவரம் நடப்பதற்கு முன் அப்பகுதியில் மின் இணைப்பை உள்ளூர் மின்சாரத் துறை ஊழியரான நசீம் அன்சாரி துண்டித்ததாகவும் தேசியப் புலனாய்வுத் துறை அடையாளம் கண்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட தப்லீக் ஜமாத்தின் முக்கிய உறுப்பினராக இருக்கும் இஸ்லாமிய மதகுருவான குமாம் தான் இந்த மதக்கலவரத்துக்கு முக்கிய மூளையாக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தடைசெய்யப்பட்ட ஹர்கத்-உல்-முஜாஹிதீன், ஹர்கத்-உல்-அன்சார் மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற அமைப்புகளுடன் குமாம் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும் குற்றம்சாட்டப் பட்டுள்ளது.
பிராத்நகர், ரௌதஹத், நேபாள்கஞ்ச் மற்றும் கபில்வஸ்து ஆகிய மாவட்டங்கள் வழியாக பயணத்தை மேற்கொண்ட குமாம், தான் சென்ற மாவட்டங்களில் உள்ள மசூதிகள் மற்றும் மதரஸாக்களில் வன்முறை முன் தயாரிப்பு கூட்டங்கள் நடத்தியதையும் புலனாய்வுத் துறையினர் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
கூடுதலாக கடந்த ஜூலை 20ம் தேதி 30 நாள் சுற்றுலா விசாவில் கோலாலம்பூர் வழியாக டாக்காவிலிருந்து காத்மாண்டுவிற்கு வந்து, பின்னர் இந்தியாவுடனான எல்லைப் பகுதிகளை ஒட்டிய மாவட்டங்களில் பயணம் செய்த ஒன்பது வங்கதேச மதகுருக்களின் வருகை குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு நேபாளம் ஒரு தளமாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதையே இந்த விசாரணைகள் சுட்டிக் காட்டுகின்றன.
ஏற்கனவே 1990- மற்றும் 2000-ம் ஆண்டுகளில் நேபாளத்தில் ISI மிகவும் தீவிரமாகச் செயல்பட்டதாகவும், 1999-ல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டதும் நேபாள நிலப்பரப்பை இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ISI பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ISI- ஆதரவுடன் போலி சிம் கார்டு விநியோகக் கும்பலில் ஈடுபட்ட நேபாள நாட்டைச் சேர்ந்த பிரபாத் குமார் சௌராசியா டெல்லியில் கைது- ராணுவம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் மற்றும் சந்தேகத்துக்கான பொருட்களுடன் அன்சாருல் மியான் அன்சாரி கைது- ISI-யுடன் தொடர்புடைய ஆயுதக் கடத்தல் நெட்வொர்க்கில் இருந்த ஷேக் சலீம் நேபாளத்தில் கைது- கடந்த ஏப்ரலில் கபில்வஸ்துவில் நான்கு பாகிஸ்தான் உளவாளிகள் கைது ஆகிய வழக்குகளையும் இந்த அறிக்கையுடன் இணைத்து விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.
இந்தியாவை ஒட்டிய நேபாள எல்லை பகுதிகளில் சுமார் 911 பதிவு செய்யப்பட்ட மசூதி மற்றும் மதரஸாக்கள் இருப்பதாக நேபாள அரசின் அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன;
எனினும், 1,751கிலோ மீட்டர் நீளமுள்ள அந்நாட்டு திறந்த எல்லைப் பகுதியில் பதிவு செய்யப்படாத சுமார் 3,000 மசூதி மற்றும் மதரஸாக்கள் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இப்படி நேபாள எல்லையோர மாவட்டங்களில் மசூதிகள் மற்றும் மதரஸாக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது நேபாளம் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களாக மாறியுள்ளன.
பாகிஸ்தானின் இந்த எல்லைதாண்டிய பயங்கரவாத்துக்கான நிதி வெளிநாடுகளில் இருந்தே வருகின்றன என்றும், அதில் கணிசமான பகுதி துருக்கி, கத்தார், குவைத், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வருவதாகப் புலனாய்வாளர்கள் கூறியுள்ளனர்.
நேபாளத்தில் நடந்த மாணவர்கள் போராட்டத்துக்கான நிதி ஆதாரங்கள், எல்லை தாண்டிய நெட்வொர்க் மற்றும் வெளிநாட்டு இஸ்லாமிய மதகுருக்களின் பங்கு ஆகியவை குறித்தும் விரிவான விசாரணைக்கு இந்த உளவுத்துறைத் தகவல்கள் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
















