தமிழகம் முழுவதும் வெற்றிப் பயணத் திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் சென்னையில் தொடங்கி வைத்தார்.
மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி, மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டத்தின் விரிவாக்கமான, வெற்றிப் பயணத் திட்டம் தொடங்கி வைக்கப்படும் என முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்திருந்தார்.
அதன்படி, இத்திட்டத்தை தொடங்கி வைக்க முதலமைச்சர் ஜோசப் விஜய், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வருகை தந்தார். அங்கு, காந்தி ஜெயந்தியையொட்டி மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு, முதலமைச்சர் விஜய், மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து வெற்றிப் பயணத் திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார். பின்னர் பேருந்தில் ஏறி பெண் பயணிகளுக்கான கட்டணமில்லா பயணச்சீட்டுகளை முதலமைச்சர் வழங்கினார். ஒவ்வொரு இருக்கைக்கும் சென்று அங்கு அமர்ந்திருந்த பெண்களுக்கு பயணச்சீட்டை வழங்கினார்.
கட்டணமில்லா பயணச்சீட்டு கொடுத்த முதலமைச்சருக்கு சாக்லெட் கொடுத்தும், கைகளால் சுத்திப்போட்டும் பெண்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது, பெண் பயணிகளுடன் அமர்ந்து முதலமைச்சர் விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
வெற்றிப் பயணத் திட்டத்தில், சாதாரண நகர பேருந்துகளுடன், எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் பேருந்துகளிலும் பெண்கள் கட்டணமின்றி பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் அரசுக்கு சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் செலவினம் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு சுமார் 84 லட்சத்து 32 ஆயிரம் பெண்கள் பயனடைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் திருநர்களும் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
















