ஃப்ளைதுபாய் விமானத்தில் சக விமானியால் தாக்குதலுக்கு உள்ளாகி பயணிகளை காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன், பிரதமர் நரேந்திர மோடி வீடியோ காலில் உரையாடி, விரைவில் நலம்பெற வாழ்த்து தெரிவித்தார்.
ஃப்ளைதுபாய் விமானத்தில் நடுவானில் நிகழ்ந்த தாக்குதலை முறியடித்து 174 பயணிகளின் உயிர்களைக் காப்பாற்றிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார். அப்போது நடுவானில் நிகழ்ந்த பதற்றமான தருணங்கள் குறித்து கேட்டறிந்தார்.
இக்கட்டான சூழலில் மன தைரியத்தை அளித்தது எது என்பது குறித்து பிரதமர் மோடியிடம் கேப்டன் ஸ்மித் விவரித்தார். படுகாயமடைந்த நிலையிலும் துணிச்சலுடன் செயல்பட்டு, பெரும் அசம்பாவிதத்தை தடுத்த ஸ்மித்தின் வீரதீரச் செயலை பிரதமர் மோடி வெகுவாகப் பாராட்டினார்.
தொடர்ந்து, விமானி ஸ்மித் விரைவில் பூரண குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். மேலும், சவுதி அரேபியாவில் ஸ்மித் மச்சாருக்கு அளிக்கப்படும் உயர்தர மருத்துவ சிகிச்சைகள் மற்றும் இந்திய தூதரகத்தின் உதவிகள் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார்.
நடுவானில் தாக்குதல் நடந்தபோது, தான் அனுமன் சாலிசாவை பாராயணம் செய்து கொண்டிருந்ததாக பிரதமர் மோடியுடன் வீடியோ காலில் பேசிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சார் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
பிரதமர் மோடியுடன் பேசியபோது உணர்ச்சிவயப்பட்ட ஸ்மித் மச்சார், பிரதமருடன் பேசுவது தனக்கு மிகவும் சிறப்பான தருணம் என்று குறிப்பிட்டார். சிரமமான சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது அனுமன் சாலிசாவை பாராயணம் செய்வதாக தெரிவித்த ஸ்மித் மச்சார், விமானத்தில் இக்கட்டான தருணத்திலும் தான் அனுமன் சாலிசாவை பாராயணம் செய்ததாக குறிப்பிட்டார்.
















