உக்ரைன் போரை அமைதியான முறையில் முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இந்திய பிரதமர் மோடியின் முயற்சிகளை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் நடைபெற்ற சர்வதேச நிபுணர்களின் ‘வால்டாய் ஃபோரம்’ மாநாட்டில் அதிபர் புதின் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, பிரதமர் மோடி, தங்களுக்கிடையே இருக்கும் மிகச் சிறந்த, நட்புரீதியான தனிப்பட்ட உறவுகளையும் தாண்டி, உக்ரைன் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது குறித்துத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் உலகத் தலைவர்களில் ஒருவர் என பாராட்டினார்.
உக்ரைன் போர் ஐந்தாவது ஆண்டாக நீடித்து வரும் நிலையில், இரு தரப்பிற்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகளைக் கண்டறிவதில் பிரதமர் மோடி மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார் என்றும் அவரிடம் இதற்கான நல்ல யோசனைகளும் உள்ளன என்றும் புதின் கூறினார்.
இந்த விவகாரத்தில், இந்தியா நடுநிலையான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் அதிக அக்கறை காட்டுகிறது என்றும் அவரது யோசனைகளுக்காக நாங்கள் இந்தியப் பிரதமருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் புதின் குறிப்பிட்டார்.
















