பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி இன்று உடல்நலக்குறைவு காரணமாக தனது 94-வது வயதில் காலமானார்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் 1.59 மணியளவில் அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, மருத்துவமனையில் இருந்து அவரது உடல் தற்போது தேனாம்பேட்டை செனடாப் சாலையில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அவரது உடல் இல்லத்தில் பொதுமக்கள், திரையுலகினர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் வைக்கப்பட உள்ளது.
சௌகார் ஜானகியின் மறைவு செய்தி வெளியானதை தொடர்ந்து, அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக தங்களது இரங்கலையும், புகழஞ்சலியையும் பதிவு செய்து வருகின்றனர்.
தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழக முதலமைச்சர் விஜய், நடிகை சௌகார் ஜானகியின் மறைவு இந்திய திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன், சௌகார் ஜானகியை தனது நீண்டகால திரைப்பயணத்தில் இணைந்து பணியாற்றியவர் என நினைவுகூர்ந்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் சௌகார் ஜானகியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
திரையுலகை பொறுத்தவரை, ஜூனியர் என்டிஆர், விஷ்ணு மஞ்சு, பிரபுதேவா, சிரஞ்சீவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் சௌகார் ஜானகியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, நாளை முக்கிய அரசியல் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் திரையுலக பிரபலங்கள் சௌகார் ஜானகியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த வர வாய்ப்புள்ளதால், அவரது இல்லத்தை சுற்றியுள்ள பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதுடன், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், வாகனப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாளை காலை சௌகார் ஜானகியின் உடல் இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பெசன்ட் நகர் மின்மயானத்தில் குடும்ப வழக்கப்படி இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
70 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் பயணித்து, 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த சௌகார் ஜானகியின் மறைவு, தமிழ் மற்றும் தென்னிந்திய திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
















